நாகையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்


நாகையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 April 2019 4:15 AM IST (Updated: 2 April 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ்குமார் தனது கையெழுத்திட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-

தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக நாகை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவினை எய்திடும் வகையில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாகவும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்காளர் ஆகிய ஒவ்வொருவரும் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்வது மட்டுமல்லாமல், தங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களையும் தவறாமல், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி வாக்களிக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, தாசில்தார் (தேர்தல்) ராஜகோபால் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story