அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் விலை கொடுத்து வாங்கப்பட்டவை முத்தரசன் பேட்டி


அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் விலை கொடுத்து வாங்கப்பட்டவை முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 2 April 2019 4:45 AM IST (Updated: 2 April 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகள் விலை கொடுத்து வாங்கப்பட்ட கட்சிகள் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

புதுக்கோட்டை,

தி.மு.க. கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து புதுக்கோட்டை பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் புதுக்கோட்டை திலகர் திடல் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று திருநாவுக்கரசருக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் தான் தி.மு.க. நிர்வாகிகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வீட்டில் இல்லாத பணமா? தி.மு.க. நிர்வாகிகள் வீட்டில் இருக்கப்போகிறது. இந்த சோதனையின் மூலம் தி.மு.க. கூட்டணி கட்சியினரை அடிபணிய வைத்து விடலாம் என அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது.

வருமான வரித்துறையை வைத்துதான் அ.தி.மு.க.வை அடிபணிய வைத்து பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகள் விலை கொடுத்து வாங்கப்பட்ட கட்சிகள். தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகள் கொள்கை பிடிப்போடு இணைந்த கட்சிகள். இந்த கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறும்.

கேரள மாநிலத்தில் ராகுல்காந்தி போட்டியிடுவதால் எங்களது கூட்டணிக்குள் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. கேரள மாநிலத்தில் நான் பிரசாரம் செய்தால் காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது என்றுதான் கூறுவேன். ஆனால் தமிழகத்தில் நான் பிரசாரம் செய்வதால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறேன். ஒவ்வொரு மாநில கட்சிகளுக்கும், ஒவ்வொரு கொள்கைகள் உண்டு. ஆனால் எங்களுடைய ஒரே நோக்கம் பா.ஜ.க.வை தோற்கடிக்க செய்வது தான். தேர்தல் முடிந்தவுடன் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதேபோல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story