பா.ஜ.க. ஆட்சியில் கருத்துரிமை பாதிக்கப்பட்டுள்ளது முத்தரசன் பேச்சு


பா.ஜ.க. ஆட்சியில் கருத்துரிமை பாதிக்கப்பட்டுள்ளது முத்தரசன் பேச்சு
x
தினத்தந்தி 3 April 2019 4:30 AM IST (Updated: 3 April 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. ஆட்சியில் கருத்துரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று கறம்பக்குடியில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் முத்தரசன் கூறினார்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தேர்தல் நிதியளிப்பு மற்றும் பிரசார பொதுக்கூட்டம் கறம்பக்குடி வள்ளுவர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நமது நாட்டில் இதுவரை நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கும், தற்போது நடைபெற உள்ள தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது.

தற்போது நடைபெறும் பா.ஜ.க. ஆட்சியில் கருத்துரிமை பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு அளித்துள்ள பாதுகாப்பு பறிபோய் உள்ளது. இந்த நிலை, தொடர வேண்டுமா, இல்லை உண்மையான ஜனநாயக கட்சி, கருத்து சுதந்திரம் உள்ள அரசு அமைய வேண்டுமா என்பது தான் தற்போதைய பிரச்சினை.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளை பிரதமர் மோடி அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறார். எதிர்கட்சிகளை மிரட்ட வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் தவறாக கொண்டு செல்லப்படுகிறது. பா.ஜ.க. அரசின் கைப்பாவையாகவே எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுகிறது.

முதல்-அமைச்சர் பழனிசாமி தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார். அரசுக்கு எதிராக கருத்து சொன்ன முகிலன் காணாமல் போய்விட்டார். திருமுருகன் காந்தி, கல்லூரி மாணவி வளர்மதி போன்றோர் மீது வழக்கு போட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியினர் தேர்தல் விதி முறைகளை மீறி வருகின்றனர். முதல்-அமைச்சர் பிரசாரத்தில் அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிர்வாக்குழு உறுப்பினர்கள் செங்கோடன், ராமதாஸ், நாராயணன், ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தங்கராசு நன்றி கூறினார். 

Next Story