தாளவாடியில் சூறாவளிக்காற்றுடன் சாரல் மழை தென்னை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது


தாளவாடியில் சூறாவளிக்காற்றுடன் சாரல் மழை தென்னை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது
x
தினத்தந்தி 3 April 2019 3:08 AM IST (Updated: 3 April 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடியில் சூறாவளிக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்போது தென்னை மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்தது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியது. இதனால் தாளவாடி வனப்பகுதியில் உள்ள மரம், செடி–கொடிகள் காய்ந்து கருகிவிட்டன. மேலும் அங்குள்ள குட்டைகள் மற்றும் தடுப்பணைகளும் தண்ணீரின்றி வறண்டன. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத்தேடி கிராமப்பகுதிக்குள் புகுந்து விடுகின்றன.

இந்த நிலையில் நேற்றும் காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்தியது. பின்னர் மதியம் 1 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. இதைத்தொடர்ந்து சூறாவளிக்காற்றுடன் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.

திடீரென சாரல் மழை பெய்ததால் தாளவாடி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பலத்த சூறாவளிக்காற்று வீசியதால் தாளவாடி இரியாபுரம் பகுதியில் உள்ள பாக்யா என்பவரின் வீட்டின் மீது தென்னை மரம் முறிந்தது விழுந்தது.

அப்போது வீட்டில் இருந்த பாக்யா மற்றும் உறவினர்கள் ஹேமாவதி, வீரம்மா ஆகியோர் வெளியே ஓடிவந்ததால் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினார்கள். எனினும் வீட்டின் ஓடுகள் அனைத்தும் சேதமானது.


Related Tags :
Next Story