அ.தி.மு.க.வை அழிக்க நினைத்த துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் -எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க.வை அழிக்க நினைத்த துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என பரமக்குடியில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகரையும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனையும் ஆதரித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9.50 மணிக்கு பரமக்குடியில் பிரசாரம் செய்தார். அங்குள்ள பஸ் நிலையம் பகுதியில் அவர் பேசியதாவது:–
மத்தியில் நிலையான ஆட்சி அமைய, திறமையான ஆட்சி மலரவும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். மீண்டும் பிரதமராக தகுதியானவர் மோடி தான். இந்த் தொகுதியில் துரோகிகளால் தான் இந்த இடைத் தேர்தலை சந்திக்கிறோம். துரோகிகளை வீழ்த்தவும், மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கொள்கையுடைய ஆட்சி அமைய வேண்டும். அ.தி.மு.க.வை அழிக்க, ஒழிக்க நினைத்த துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அனைத்து துறையிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 76 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.3 லட்சத்து 432 கோடியில் தமிழகத்தில் பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்து தொழில் தொடங்கி உள்ளனர்.
ஆட்சியில் இல்லாதபோதே தி.மு.க.வின் அராஜகம் தற்போது தலைவிரித்தாடுகிறது. பெண்களிடம் சில்மிஷம் செய்வது, பிரியாணி கடைகளில் ஓசி கேட்டு தகராறு செய்வது தி.மு.க.வின் வாடிக்கையாகி விட்டது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. நலத்திட்டங்கைள செயல்படுத்தியதில் விருது பெற்று தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.