எதிர்க்கட்சியினரை ஜெயிலில் போடுவோம் என்பதா? முதல் அமைச்சரின் மிரட்டல் நெடுங்காலம் நீடிக்காது அன்பழகன் எம்.எல்.ஏ. பேச்சு


எதிர்க்கட்சியினரை ஜெயிலில் போடுவோம் என்பதா? முதல் அமைச்சரின் மிரட்டல் நெடுங்காலம் நீடிக்காது அன்பழகன் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 2 April 2019 11:20 PM GMT (Updated: 2 April 2019 11:20 PM GMT)

எதிர்க்கட்சியினரை ஜெயிலில் போடுவதாக முதல் அமைச்சர் மிரட்டுவது நெடுங்காலம் நீடிக்காது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அரியாங்குப்பம் தொகுதியில் அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் ஏ.வி.ஆர். மகாலில் நடந்தது. என்.ஆர்.காங்கிரஸ் துணைத்தலைவர் சபாபதி என்ற கோதண்டராமன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாநில செயலாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தேசிய கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமான கூட்டணி அமைத்துள்ளது. மேற்கு வங்கம், கேரளாவில் எதிரும் புதிருமான கட்சிகள் தமிழகம் மற்றும் புதுவையில் கொள்கைகளை மறந்து காங்கிரஸ், தி.மு.க.வுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். இது சந்தர்ப்பவாத கூட்டணி.

புதுச்சேரியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி வினோதமான அரசு நடத்தி வருகிறார். தனது ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு கேட்பதை விட்டுவிட்டு, ஆட்சி இருக்கிறது என்ற தைரியத்தில் மாற்றுகட்சியை சேர்ந்தவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி தங்கள் கட்சிக்கு இழுக்கும் வேலையை செய்து வருகிறார். ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்த 4 முன்னாள் வாரிய தலைவர்களை விலைக்கு வாங்கியவர்.

தமிழகத்தில் வேலூர் காட்பாடியில் கொள்ளையடித்த பணத்தின் மூலம் வாக்காளர்களை விலைக்கு வாங்க முன்னேற்பாடாக பதுக்கி வைத்திருந்த பணம் ரூ.15 கோடிக்கு மேல் கைப்பற்றப்பட்டுள்ளன. புகாரின் அடிப்படையில் சோதனை செய்யும் போதே, எங்கள் தேர்தல் பணியை முடக்கும் செயலில் ஆளுங்கட்சி செய்கிறது என தி.மு.க. தலைவர் கூறுகிறார்.

தி.மு.க.வினர் கொள்ளையடித்த பணத்தை கட்டுக்கட்டாக பதுக்கி வைப்பார்களாம். தேர்தல் துறை, வருமான வரி துறைக்கு வரும் புகாரின் அடிப்படையில் அவர்கள் சோதனை செய்யக்கூடாதாம். இந்த தேர்தல் முடியும் வரை தி.மு.க.வை தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும்.

அ.தி.மு.க.வின் கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி வெற்றி பெறுவதன் மூலம் புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அந்த உண்மையை சொன்னால் கூட நம் முதல்–அமைச்சர், ஜெயிலில் தூக்கி போட்டு விடுவோம் என எங்களை மிரட்டுகிறார். இந்த மிரட்டல் நெடுங்காலம் நீடிக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story