‘சி–விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து மாணவ–மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி


‘சி–விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து மாணவ–மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
x
தினத்தந்தி 3 April 2019 11:00 PM GMT (Updated: 3 April 2019 5:08 PM GMT)

‘சி–விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர்,


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வாக்காளர்களுக்கு, அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கவும், மற்றும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து கண்காணிக்கவும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக நேரடியாக புகார் தெரிவிக்க ஏதுவாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் ‘சி–விஜில்’ என்ற செல்போன் செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலியை தங்களது ஸ்மார்ட் போனில் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்கலாம். இந்த புகாரை அளிக்கும் பொதுமக்கள் குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் ரகசியமாக வைக்கப்படும். புகார் அளிப்பவரின் விவரங்கள் ஏதுமில்லாமலும், புகார் அளிக்கலாம்.


இதில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ–மாணவிகள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக புகார்களை அனுப்ப வசதியாக கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு ‘சி–விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் வட்டத்தில் உள்ள மார்டன் கலை அறிவியல் கல்லூரியில் ‘சி–விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து மாணவ–மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதையொட்டி கல்லூரி முகப்பில் ‘சி–விஜில்’ என்ற செல்போன் செயலியின் ‘லோகோ’வை வரைந்து அதன் முன்பு மாணவிகள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர் கோமதி, ‘சி–விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து விரிவாக எடுத்துக்கூறி மாணவ–மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். சரகத் துணைப்பதிவாளர் கே.கே.செல்வராஜ் ‘சி–விஜில்’ செயலியின் செயல்பாடுகளை பயன்படுத்துவது எப்படி என்று விளக்கினார். பின்னர் அந்த செயலியை பயன்படுத்துவோம் என்று 200–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். முகாமில் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், கல்லூரியின் துணை முதல்வர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story