அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 50 சதவீதம் உயர்த்த நடவடிக்கை முதன்மை கல்வி அலுவலர் தகவல்


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 50 சதவீதம் உயர்த்த நடவடிக்கை முதன்மை கல்வி அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 4 April 2019 4:30 AM IST (Updated: 3 April 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 50 சதவீதம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் 2019 - 2020-ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பள்ளிகல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க திருவண்ணாமலை நகரம் முழுவதும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. அதன் மூலம் மாணவர் சேர்க்கை 25 சதவீதம் உயர்ந்தது. வருகிற கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மாணவர்களை அழைத்து பள்ளியில் சேர்த்து வருகின்றனர். ஆசிரியர்கள் ஏற்கனவே அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தனித்திறன்களை வீடியோவாக பதிவு செய்து மற்ற பெற்றோர்களிடம் காண்பித்து அவர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு பள்ளியில் தினமும் நடைபெறும் மாணவர் சேர்க்கை விவரங்களை வாரத்துக்கு ஒருமுறை அந்தந்த ஒன்றியங்களில் உள்ள பள்ளி தகவல் விவர சேகரிப்பாளர்களிடம் தெரிவிப்பார்கள். கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு எடுக்கப்பட்ட முயற்சியின் அடிப்படையில் 450 அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பள்ளிக்கு புதுமை பள்ளி விருதும், இப்பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசும் வழங்கப்பட உள்ளது. விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்கள் பலர் மாணவர் சேர்க்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வருகிற கல்வி ஆண்டில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளியில் ஆரம்பிக்கப்பட உள்ளதால் பெற்றோர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.

அதிக மாணவர்களை சேர்க்கும் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பெருமை படுத்தப்படுவார்கள். இந்த ஆண்டும் விளம்பர பேனர்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story