‘எத்தனை எட்டப்பர்கள் இருந்தாலும் நாம் ஜெயிப்பது நிச்சயம்’ வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் பேச்சு
எத்தனை எட்டப்பர்கள் இருந்தாலும் நாம் ஜெயிப்பது நிச்சயம் என்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர்ஆனந்த் கூறினார்.
குடியாத்தம்,
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேலூர் நாடாளுமன்றம் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தேர்தல் அலுவலகத்தை மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
விழாவில் வேலூர் நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் பேசியதாவது:-
நாம் எல்லாம் ஒரே அணியாக நிற்க வேண்டும். எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும், கூடவே நம்பிக்கை துரோகிகளும் இருக்கிறார்கள். கூடவே இருந்து குழிப்பறிக்கும் வல்லுனர்களும் இருக்கிறார்கள். இந்த சக்திகளை முறியடிக்க நாம் தேர்தலில் ஒற்றுமையாக இருந்து ஒரே இலக்காக மக்களின் செல்வாக்கை பெற்று வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் பெற வேண்டும்.
இது நமது ஒற்றுமைக்கு விடுக்கப்பட்ட சவால். எத்தனை இன்னல்கள் வந்தாலும் நமது கதாநாயகனாக இருக்கின்ற நமது தேர்தல் வாக்குறுதி திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அதனை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். நம்முடன் எத்தனை எட்டப்பர்கள் இருந்தாலும் சரி, நமது ஒற்றுமையில் அவர்கள் கலைந்து சென்று விடுவார்கள். நாம் ஜெயிப்பது நிச்சயம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் காத்தவராயன், நகர பொறுப்பாளர் எஸ்.சவுந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர் ரவி, டி.கிருஷ்ணமூர்த்தி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள பென்னாத்தூர், அல்லாபுரம், தொரப்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story