வன்முறை கலாசாரத்தை அடிப்படையாக கொண்டது தி.மு.க. திருப்பூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


வன்முறை கலாசாரத்தை அடிப்படையாக கொண்டது தி.மு.க. திருப்பூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2019 4:45 AM IST (Updated: 4 April 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

வன்முறை கலாசாரத்தை அடிப்படையாக கொண்டது தி.மு.க. என்று திருப்பூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரத்தின்போது பேசினார்.

திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திருப்பூரில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார். காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் மற்றும் கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமி அம்மாள் பள்ளி முன்பு பிரசாரத்தின் போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெற்றி பெற்றவுடன் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் தேவையை அறிந்து அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார். மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை மத்திய, மாநில அரசுகளின் துணையோடு நிச்சயம் நிறைவேற்றிக்கொடுப்பார்.

மக்களாகிய நீங்கள் தான் எஜமானர்கள். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி எப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்பதை எடைபோட்டு பார்ப்பவர்கள் நீங்கள். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள். தமிழகத்துக்கு தேவையான திட்டத்தை நிறைவேற்றிக்கொடுக்கவில்லை. சேது சமுத்திர திட்டத்தை அறிவித்து அதில் பல கோடி ரூபாய் வீணானது தான் மிச்சம். காவிரி இறுதி தீர்ப்பை பெற்று அரசிதழில் வெளியிட செய்தவர் ஜெயலலிதா. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தஞ்சாவூரில் ஜெயலலிதாவுக்கு அப்பகுதி விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் பங்கேற்ற ஜெயலலிதா, இன்று தான் என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

ஆனால் காவிரி நதிநீர் பிரச்சினையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எதையாவது செய்தார்களா?. இல்லை. இலங்கையில் 2009-ம் ஆண்டு ராஜபக்சே அதிபராக இருந்தபோது நடந்த போரில் 4 லட்சம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5 லட்சம் பேர் அகதிகளாக முள்வேலிக்குள் அடைபட்டனர். போர் நடந்த காலத்தில் சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதாக நாடகமாடினார். பின்னர் மத்திய அரசு மூலமாக இலங்கையில் பேசி போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்தார்.

இதை நம்பி இலங்கையில் பதுங்கு குழிக்குள் இருந்து பெண்களும், குழந்தைகளும் வெளியே வந்தபோது விமானம் மூலமாக குண்டு போட்டு 40 ஆயிரம் பேரை கொன்று குவித்தார்கள். அதை மறக்க முடியுமா?. அதைத்தொடர்ந்து தி.மு.க. மந்திரிகளாக இருந்த கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் இலங்கைக்கு சென்று ராஜபக்சேவிடம் பரிசுப்பொருட்களை வாங்கி வந்தார்கள். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் காங்கிரஸ்-தி.மு.க. அநீதி இழைத்து விட்டது.

2023-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 15 லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். இதுவரை 6 லட்சம் குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாறிவிட்டன. வருகிற 2023-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் குடிசை வீடுகள் இல்லாத நிலை ஏற்படுவது நிச்சயம். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது வழங்கப்பட்ட நலத்திட்டங்களை குறைவில்லாமல், அதைவிட கூடுதலாக மக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வழங்கி வருகிறது. ஜெயலலிதா தெய்வமாகிவிட்டார். அவர் எங்களை கண்காணித்து வருகிறார் என்பதை மனதில் நிறுத்தியே பயத்துடன் மக்களுக்கு பணியாற்றி வருகிறோம்.

பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்து 3 நாட்கள் வழங்கினோம். அதற்குள் தி.மு.க. கோர்ட்டில் வழக்கு போட்டு தடுத்து விட்டது. விரைவில் அந்த தடையை உடைத்து 60 லட்சம் பேருக்கு கண்டிப்பாக ரூ.2 ஆயிரத்தை வழங்குவோம். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை இல்லை. சாதி, மத மோதல்கள் இல்லை. ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் உள்ளார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து தமிழகத்தை தீவைத்து கொளுத்துகிறார்கள் என்கிறார். உங்கள் குடும்ப சண்டையில் தான் நாளிதழ் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டு 3 பேர் பலியானார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு இப்போது ஆயுள் தண்டனையும் கோர்ட்டு விதித்துள்ளது.

பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் மல்யுத்த வீரர் போல் கடைக்காரரை தி.மு.க.வினர் தாக்குகிறார் கள். புரோட்டோ கடையில் தகராறு, பெண்கள் அழகு நிலையத்தில் மாமூல் கேட்டு தகராறு என எங்குபார்த்தாலும் வன்முறையை கையில் எடுக்கிறார்கள். வன்முறை கலாசாரத்தை அடிப்படையாக கொண்டது தி.மு.க. இந்த நாடாளுமன்ற தேர்தலோடு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். 1½ கோடி உண்மை தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க. இரும்பு கோட்டை. கருணாநிதியால் கூட முடியவில்லை. அவருடைய மகன் மு.க.ஸ்டாலினால் என்ன செய்ய முடியும். புயல், சுனாமி, பூகம்பம் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. தொண்டர்களை அடிப்படையாக கொண்டது அ.தி.மு.க., சாதாரண தொண்டனாக இருப்பவர் கூட முதல்-அமைச்சராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, துணை ஒருங்கிணைப்பாளராக அ.தி.மு.க.வில் மட்டுமே வர முடியும்.

தனக்கு பிறகும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்து சென்றார். அவரை பின்பற்றியே ஆட்சி நடந்து வருகிறது. தமிழக அரசு 7 துறைகளில் இந்திய அளவில் முதன்மை பெற்று விளங்கி விருதுகளை பெற்றுள்ளது. மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்ற சரித்திரத்தை படைக்க நீங்கள் உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story