இடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் சிவகாசி டவுன் போலீஸ் நிலைய கட்டுமானப்பணி தொடங்கப்படாத நிலை
சிவகாசி டவுன் போலீஸ் நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை.
சிவகாசி,
சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் தற்போது 60–க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள். இந்த போலீஸ் நிலைய கட்டிடம் 119 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். மேலும் போதிய இடவசதி இன்றி போலீசார் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2017–ம் ஆண்டு நவம்பர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிவகாசி மற்றும் திருத்தங்கல் போலீஸ் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தார். அதற்கான நிதியும் ஒதுக்க உத்தரவிட்டார்.
தற்போது சிவகாசி டவுன் போலீஸ் நிலைய கட்டிடத்துக்கு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிதியை கொண்டு புதிய போலீஸ் நிலைய கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 119 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவகாசி டவுன் போலீஸ் நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றினர். அங்கு இயங்கி வந்த போலீஸ் நிலையம் சாட்சியாபுரத்தில் உள்ள மகளிர் போலீஸ் நிலைய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது வரை கடந்த 1 வருடமாக அங்கு தான் சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. பழைய கட்டிடத்தை இடிக்கும் போது இந்த இடத்தில் இன்னும் 6 மாதங்களில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் போலீஸ் நிலையம் செயல்படும் என அதிகாரிகள் அறிவித்தனர்.
ஆனால் ஓராண்டு ஆகியும் அந்த பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு எந்த பணிகளையும் மேற்கொள்ள வில்லை. இதே கால கட்டத்தில் திருத்தங்கல் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது 70 சதவீத பணிகள் முடிந்து விட்டன. ஆனால் சிவகாசி டவுன் போலீஸ் நிலைய கட்டுமான பணி தொடங்கப்படாமலேயே உள்ளது.
எனவே சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு கட்டிடம் கட்டும் பணியை உடனே தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட காவல்துறை நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.