தி.மு.க. ஒரு குடும்பத்திற்கான கட்சி: எப்போதும் மக்களுக்காக செயல்படும் கட்சி அ.தி.மு.க.தான் எடப்பாடி பழனிசாமி பேச்சு
எப்போதும் மக்களுக்காக செயல்படும் கட்சி அ.தி.மு.க.தான் என்றும், தி.மு.க. ஒரு குடும்பத்திற்கான கட்சி எனவும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை அரண்மனை வாசலில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.
பின்னர் அவர் மானாமதுரை, இளையான்குடியில் எச்.ராஜாவையும், மானாமதுரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜனையும் ஆதரித்து பேசினார்.
பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் எச்.ராஜாவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த தொகுதியில் இதற்கு முன்பு எத்தனை முறை ப.சிதம்பரம் எம்.பி.யாக இருந்தார். அவர் தொகுதிக்கு ஏதாவது செய்தாரா அல்லது தமிழ்நாட்டிற்குதான் ஏதாவது செய்தாரா? அவர் இந்தியாவின் நிதி மந்திரியாக இருந்துள்ளார். மிக பெரிய பொறுப்பில் இருந்தும் எதுவுமே செய்யாதபோது, அவர் மகன் மட்டும் எப்படி செய்வார்?
எனவே இந்த தொகுதி வளம் பெற, நலம் பெற எச்.ராஜாவை வெற்றி பெற செய்யுங்கள். இந்த தொகுதிக்கு சிறந்த வேட்பாளர் கிடைத்துள்ளார். சிவகங்கை தொகுதி மற்ற தொகுதிகளுக்கு எடுத்துக்கட்டாக விளங்கும்.
மத்தியில் நிலையான ஆட்சி இருந்தால்தான் நமக்கு திட்டங்கள் கிடைக்கும். தமிழகம் வளமோடு செழிக்க வேண்டும் என்ற ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைத்து உள்ளோம்.
கடந்த 1996–ம் ஆண்டில் இருந்து 33 ஆண்டுகளாக பெரியாறு தண்ணீர், சிவகங்கை தெப்பகுளத்திற்கு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு இந்த தண்ணீரை கொடுத்தோம். இனி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் தரப்படும்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் ரூ.3½ கோடியில் அவசர விபத்து சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் ரூ.40 கோடியில் வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் கட்டப்படுகின்றன. இதுதவிர நபார்டு திட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் பள்ளிக்கூடங்களில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். மக்களுக்கு சேவை செய்யம் கட்சிகள் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத சுயநல கூட்டணி ஆகும். இந்தியாவிலேயே சிறந்த சாலை வசதியுள்ள மாநிலம் தமிழகம் மட்டும் தான். பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கினோம். ஏழை, குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
எப்போதும், என்றும் மக்களுக்காக செயல்படும் கட்சியாக இருப்பது அ.தி.மு.க.தான். தி.மு.க. எப்போதும் ஒரு குடும்பத்திற்கான கட்சியாக செயல்படுகிறது. மானாமதுரையில் கட்சிக்கு துரோகம் செய்வதவர்களால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. ஏராளமானோர் துரோகம் செய்தனர். அதனை எல்லாம் முறியடித்து வெற்றி பெற்றார். அதுபோல ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும், அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ.யாக இருந்தவர் உள்பட 18 பேர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் சேர்ந்து பாடுபட்டனர். அதனால்தான் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. எனவே அவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்.
ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த வைகோ, இன்று அவருடன் சேர்ந்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார். நாங்கள் செய்த திட்டங்களை கூறி வாக்குகள் சேகரிக்கிறோம். ஒரே பிரதமர், வலுவான பிரதமர் மோடி என கூறி வாக்குகள் சேகரிக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சியினர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பிரதமர் என கூறி வாக்குகள் கேட்கின்றனர்.
நான் கடும் வெயிலிலும் பிரசாரம் செய்து மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறேன். இதுவரை 7,500 கிலோ மீட்டர் பயணம் செய்து மக்களிடம் திட்டங்களை எடுத்து கூறி வருகிறேன். ஆனால் ஸ்டாலின் மாலையில் பிரசாரத்தை போட்டு விட்டு அவரே கதை, திரைக்கதை, எழுதி வருகிறார்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.