செங்கம் அருகே பஸ் - கார் மோதலில் வாலிபர் பலி கணவன் - மனைவி உள்பட 4 பேர் படுகாயம்
செங்கம் அருகே பஸ் - கார் மோதலில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கணவன் - மனைவி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
செங்கம்,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). இவர், பெங்களூருவில் தொழில் அதிபராக உள்ளார். உடல் நலக்குறைவால் சொந்த ஊரான விழுப்புரத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சங்கர் தனது மனைவி செல்வி, மகன் சதீஷ் மற்றும் சங்கரின் தாயார் வேம்பு ஆகியோருடன் காரில் பெங்களூருவுக்கு சென்றார். காரை சதீஷ் ஓட்டினார்.
செங்கத்தை அடுத்த கண்ணக்குறுக்கை அருகில் கார் செல்லும் போது, அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ் (22) என்பவர் சாலையோரமாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் எதிரே வந்த அரசு பஸ் மீதும் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் வந்த சங்கர், செல்வி, வேம்பு மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த சுரேஷ் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story