வாக்கு வங்கி உள்ள கட்சிகள் இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்


வாக்கு வங்கி உள்ள கட்சிகள் இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்
x
தினத்தந்தி 5 April 2019 4:45 AM IST (Updated: 4 April 2019 11:22 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு வங்கி உள்ள கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்போரூர் பஸ் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தமிழகத்தின் உரிமையை மீட்டு எடுக்க வேண்டும். இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் வாக்கு வங்கி உள்ள கட்சிகள். ஆனால் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க.வுக்கு மட்டுமே வாக்கு வங்கி உள்ளது. எனவே நமது கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்.

நல்ல திட்டங்கள் வர வேண்டும். இந்த பகுதியில் பக்கிங்காம் கால்வாயில் நீர் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதனை மரகதம் குமரவேல் தேர்தலில் வெற்றி பெற்றதும் அமைத்து தருவார். இந்த பகுதியில் துணை தலைநகரம் ஏற்படுத்த வேண்டும்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என்ன பேசுவது? என்று தெரியாமல் பேசி வருகிறார். நான் கல்வி, பொருளாதாரம், விவசாயம், நீர் மேலாண்மை பற்றிய திட்டங்கள் பற்றி மக்களிடையே பேசி வாக்கு கேட்டு வருகிறேன். ஆனால் ஸ்டாலின், முதல்-அமைச்சர் பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் தனிநபர் குறித்து பேசி வருகிறார். அவருக்கு அரசியல் தெரியாது.

அண்ணா ஆரம்பித்த கட்சி கருணாநிதியிடமும், இப்போது ஸ்டாலினிடமும் மாட்டிக்கொண்டுள்ளது. கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே தி.மு.க. வில் சீட் கிடைக்கும். ஆனால் அ.தி.மு.க.வில் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும். எனவே இந்த தேர்தல் விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடக்கும் போர். ஸ்டெர்லைட் ஆலை, காவிரி பிரச்சினை, கச்சத்தீவு என எல்லா நிலைகளிலும் துரோகம் செய்தது தி.மு.க. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தண்டரை கே.மனோகரன், சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன், திருப்போரூர் ஒன்றியச்செயலாளர் குமரவேல் மற்றும் பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் எஸ்.ஆறுமுகம், பா.ம.க. மாவட்டச்செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story