கரூரில் வாகன சோதனை: வேனில் கொண்டு செல்லப்பட்ட 450 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்


கரூரில் வாகன சோதனை: வேனில் கொண்டு செல்லப்பட்ட 450 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 April 2019 11:15 PM GMT (Updated: 4 April 2019 6:40 PM GMT)

கரூரில் நடந்த வாகன சோதனையில் வேனில் கொண்டு செல்லப்பட்ட 450 கிலோ வெடிபொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கரூர்,

கரூரில் உள்ள திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயலெட்சுமி தலைமையில் மாணிக்கம், சாஜிலி உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் கல்குவாரிகளில் பாறைகளை வெடிக்கவைக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் 18 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதோடு சேர்த்து மேலும் ஒரு பெட்டியில் 375 மீட்டர் நீளமுள்ள 4 வெடிமருந்து திரிகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த வெடிபொருட்களின் எடை 450 கிலோ எனவும், இதன் மதிப்பு ரூ.54 ஆயிரத்து 262 எனவும் அந்த வேனை ஓட்டி வந்த டிரைவர் வெங்கமேடு அருகே வாங்கபாளையத்தை சேர்ந்த பிரபு (வயது 28) தெரிவித்தார். மேலும் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள வெடிமருந்து குடோனில் இருந்து வாங்கி கொண்டு பரமத்தியில் உள்ள கல்குவாரிகளுக்கு கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார். மேலும் அதற்குரிய ஆவணங்களையும் அவர் அதிகாரியிடம் காண்பித்தார்.

எனினும் வாகன சோதனையின் போது, வெடிபொருட்கள் எடுத்த செல்லப்பட்ட வேனின் பின்கதவு திறந்த நிலையில் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது. மேலும் வெடிபொருட்களை கொண்டு செல்வதற்கு தகுதியான வாகனத்திற்குரிய சான்று பிரபுவிடம் இல்லை. ஏனெனில் ஜெலட்டின் குச்சிகள் எளிதில் தீப்பற்கூடியவை ஆகும். மேலும் அந்த வாகனம் வருடாந்திர வாகன தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அந்த வெடிபொருட்களுடன் அந்த வேனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். பின்னர் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்கிடையே இது பற்றி கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த சம்பவத்தால் கரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story