விவசாயிகளை மிரட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
விவசாயிகளை மிரட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன கொண்ணாம்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பவர்கிரீடு நிறுவனம் மின் வழித்தடம் அமைத்ததற்கு விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்காமல், தென்னை, மா மற்றும் பல வகை மரங்கள், விவசாய பயிர்களை வேரோடு பிடுங்கி அழித்து விட்டு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளனர்.
இழப்பீடு கொடுத்து விட்டு பணி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட சுற்றுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பவர்கிரீடு மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்தை நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை கொடுத்து விட்டு பணி தொடங்குகிறோம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் 2 போலீசார் சின்ன கொண்ணாம்பட்டி கிரமத்திற்கு வந்து விவசாயிகளை மிரட்டி உள்ளனர். மேலும் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளை பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து மிரட்டி உள்ளனர்.
எனவே விவசாயிகளை மிரட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story