தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் பிரசாரம் செல்லமுத்து பேட்டி


தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் பிரசாரம் செல்லமுத்து பேட்டி
x
தினத்தந்தி 5 April 2019 4:15 AM IST (Updated: 5 April 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய இருப்பதாக உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கூறினார்.

திருச்சி,

தமிழக விவசாயிகள் சங்கம் உள்பட 27 விவசாய சங்க அமைப்புகள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களும் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே இந்த வாக்குறுதியை அளித்து இருந்தார்.

இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய இருக்கிறோம். இந்த பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கி இருக்கிறோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என கூறிக்கொள்கிறார். ஆனால் சிறு, குறு என்ற பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார். அவருக்கு உண்மையிலேயே விவசாயிகளின் மீது பாசம் இருந்தால் மேல்முறையீடு செய்து இருக்க மாட்டார்.

உலக வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அதனை எதிர்த்து வருகிறோம். ஆசிய நாடுகள் அளவிலான ‘ஆர்செப்’ என்ற ஒப்பந்தத்தையும் எதிர்த்து வருகிறோம். மத்தியில் காங்கிரஸ் அரசு அமையும் பட்சத்தில் இந்த ஒப்பந்தங்களை அமல்படுத்த முயற்சித்தால் அதனை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story