வாகன சோதனையின் போது திருச்சி மாவட்டத்தில் ரூ.7¾ லட்சம் சிக்கியது


வாகன சோதனையின் போது திருச்சி மாவட்டத்தில் ரூ.7¾ லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 4 April 2019 11:00 PM GMT (Updated: 4 April 2019 8:11 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.7¾ லட்சம் சிக்கியது. அப்போது, மருத்துவ செலவுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ லட்சத்தையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலைக்கோட்டை,

தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கை செய்து வருகிறார்கள்.

இதில் பல இடங்களில் பணம் மற்றும் தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சிட்கோ அருகில் நேற்று காலை பறக்கும் படை தாசில்தார் இளவரசி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். சோதனையின்போது காரில் ரூ.1½ லட்சம் இருந்தது. அந்த பணம் குறித்து, காரில் பயணம் செய்த கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த முகமது அப்துல் ஜப்பாரின் மனைவி பவுல்ஜி ஹரிமாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அதற்கு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மாமனாரின் மருத்துவ செலவிற்காக அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்து செல்வதாக அவர் கூறினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் ஒப்படைத்தனர். அதை அவர், மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தார்.

இதேபோல் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் மேம்பாலத்திற்கு அடியில் நேற்று காலை நடத்தப்பட்ட வாகன தணிக்கையின்போது மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் சுந்தரராஜன் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 400 எடுத்துச்செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பறக்கும் படை தாசில்தார் ஸ்ரீமோகனா தலைமையிலான குழுவினர் இந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் திருச்சி கே.கே.நகரை அடுத்த கே.சாத்தனூர் ரெயில்வே கேட் அருகில் பறக்கும் படை தாசில்தார் மனோகரன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ரெயில்வே ஊழியர் பெருமாள் பிரபு வந்த காரை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.2 லட்சத்து 91 ஆயிரம் இருந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதை தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணமும் திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முகவேலனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தார்.

இதுபோல் திருச்சி-அரியலூர் சாலையில் பூவாளூர் பிரிவு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மதிவாணன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, காரில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 690 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பணம் குறித்து, காரில் வந்த கல்லக்குடியை சேர்ந்த அருள்பிரசாத் என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவரிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து லால்குடி தாசில்தார் சத்திய பாலகங்காதரனிடம் ஒப்படைத்தனர். அவர் அதை லால்குடி கருவூலத்தில் ஒப்படைத்தார். மொத்தத்தில் திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து 90 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

Next Story