பா.ஜனதா கூட்டணியில் ரங்கசாமி உள்ளாரா? பிரதமர் மோடியின் படம் இல்லாமல் யாருக்காக ஓட்டு கேட்கிறார்கள்? நாராயணசாமி கேள்வி

பிரதமர் மோடியின் படம் இல்லாமல் என்.ஆர்.காங்கிரசார் யாருக்காக ஓட்டு கேட்கிறார்கள்? பாரதீய ஜனதா கூட்டணியில்தான் ரங்கசாமி உள்ளாரா? என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மனு அளித்தோம். அதைத்தொடர்ந்து மாநில அந்தஸ்திற்காக டெல்லி சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அந்த போராட்டத்தில் மதச்சார்பற்ற அணி தலைவர்களும் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து மாநில அந்தஸ்து கேட்டு புதுவை சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் மத்திய அரசும், பிரதமர் மோடியும் அதை கண்டுகொள்ளவில்லை.
அந்த கோரிக்கை தற்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் சேர்க்கப்பட்டது. இதற்காக ராகுல்காந்திக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 2014 முதல் 2016 வரை நான் எம்.பி.யாகக்கூட இருந்தது கிடையாது. நான் எம்.பி.யாக இல்லாத நிலையில் மாநில அந்தஸ்தை தடுத்தேன் என்று எப்படி கூறுகிறார்? மக்களை திசை திருப்பவேண்டும் என்பதற்காகவே என் மீது, ரங்கசாமி வீண் பழி சுமத்தி வருகிறார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. இதனால் நாங்கள் வெற்றிபெறுவது உறுதி. எங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்ததும் பாரதீய ஜனதாவுக்கு தோல்விபயம் வந்துவிட்டது.
அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை பிரித்துத்தர சுதந்திரமான அமைப்பான திட்ட கமிஷனை பிரதமராக இருந்த நேரு உருவாக்கினார். அதை கலைத்து நிதி ஆயோக்கை உருவாக்கி மாநிலங்களுக்கு நிதி வேண்டும் என்றால் பிரதமரை அணுகவேண்டும் என்ற நிலையை உருவாக்கி அதிகாரத்தை பிரதமர் மோடி தன்னிடம் கொண்டுவந்துவிட்டார்.
நாங்கள் மக்களுக்கு எந்தெந்த திட்டங்களை செயல்படுத்துவோம் என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறோம். ரங்கசாமி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தேர்தலில் திசை திருப்ப கோமாளித்தனமான ஆட்சி நடக்கிறது என்ற விமர்சனம் செய்கின்றார். ஆட்சியை விமர்சனம் செய்ய அவருக்கு அருகதை இல்லை. ஸ்மார்ட் சிட்டி, வளர்ச்சி திட்டங்களை அவர் கொண்டு வந்ததாக கூறுகின்றார். சேதராப்பட்டில் அவர் ஸ்மார்ட் சிட்டியை கொண்டுவருவதாக கொடுத்த திட்டத்தை பாரதீய ஜனதா அரசு நிராகரித்தது. நாங்கள் புதுவையிலேயே அந்த திட்டத்தை செயல்படுத்த கோப்புகளை அனுப்பி ஒப்புதல் பெற்றோம். மேலும் குடிநீர் திட்டம், சுற்றுலா திட்டம், துறைமுக திட்டம், உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளோம்.
கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான இலவச அரிசி வழங்க தேர்தல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். மாநில தேர்தல் துறை அதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு இதே தேர்தல் துறை அதிகாரிகள் ஒப்புதல் கொடுத்துள்ளனர்.
இந்த தேர்தலில் யார் பிரதமராக வரவேண்டும் என்று ரங்கசாமி வாக்குசேகரிக்கின்றார்? என்று தெரியவில்லை. உருளையன்பேட்டையில் அவரது கட்சிக்காரர்கள் வாக்குகேட்டு அடித்துள்ள நோட்டீசில் ஜெயலலிதா படம் உள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் படம் இல்லை. பிற கூட்டணி கட்சி தலைவர்களின் படமும் இல்லை. அவர்கள் மோடியை பிரதமர் ஆக ஏற்கவில்லையா? யாருக்காக ஓட்டு கேட்கிறார்கள்? இதை புதுவையில் உள்ள பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்கிறார்களா? உண்மையிலேயே ரங்கசாமி பாரதீய ஜனதா கூட்டணியில்தான் உள்ளாரா? என்று தெரியவில்லை. இதற்கு ரங்கசாமி பதில் அளிக்கவேண்டும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
பேட்டியின்போது வேட்பாளர் வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், விஜயவேணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் துணைத்தலைவர் நீல.கங்காதரன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் வெளியிடப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
Related Tags :
Next Story






