செய்யாறு அருகே கழுத்தை நெரித்து டெய்லர் கொலை கள்ளக்காதலி கைது
செய்யாறு அருகே கழுத்தை நெரித்து டெய்லர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு,
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பிரம்மதேசம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 42). இவருக்கும், வேலூர் மாவட்டம் நெமிலி தாலுகா சிறுவளையம் கிராமத்தில் வசிக்கும் உறவினரான மாரி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் மஞ்சுளாவுக்கும், சிறுவளையம் கிராமத்தை சேர்ந்த திருமணமான சிட்டிபாபு என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. சிட்டிபாபு டெய்லர் வேலை செய்து வந்தார். இதுபற்றி தெரிந்ததும் மாரி, மஞ்சுளாவை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதேபோல சிட்டிபாபுவின் மனைவியும் அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதனையடுத்து சிட்டிபாபுவும், மஞ்சுளாவும் கணவன்–மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சிட்டிபாபுவுக்கு வேறுறொரு பெண்ணுடனும், மஞ்சுளாவுக்கு வேறொருவருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் பிரம்மதேசம் பாலாற்றுக்கு சிட்டிபாபுவும், மஞ்சுளாவும் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுளா, சிட்டிபாபுவை கீழே தள்ளி கல்லால் தாக்கி, கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுளாவை கைது செய்தனர்.