குமரியில் மூடி கிடக்கும் ரப்பர் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை தேர்தல் பிரசாரத்தில் எச்.வசந்தகுமார் வாக்குறுதி


குமரியில் மூடி கிடக்கும் ரப்பர் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை தேர்தல் பிரசாரத்தில் எச்.வசந்தகுமார் வாக்குறுதி
x
தினத்தந்தி 5 April 2019 10:15 PM GMT (Updated: 2019-04-06T01:03:40+05:30)

குமரியில் மூடிக்கிடக்கும் ரப்பர் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது எச்.வசந்தகுமார் வாக்குறுதி அளித்தார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று ராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றியத்தில் பிரசாரம் செய்தார். அதாவது ஈத்தாமொழி, வடக்கு சூரங்குடி, பறக்கை, ஆத்திக்காட்டுவிளை, தெங்கம்புதூர், மேலகிருஷ்ணன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருடன் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக அவர் ஈத்தாமொழியில் பேசியபோது கூறியதாவது:-

நான் குமரி மாவட்டத்தை சேர்ந்தவன் இல்லை என்றும், வெளி நாட்டு பறவை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் எனக்கு அகஸ்தீஸ்வரத்தில் வீடு உள்ளது. நாகர்கோவில் மற்றும் பல்வேறு இடங்களில் கடைகள் உள்ளன. ஓட்டுரிமையும் இங்கு தான் உள்ளது. அப்படி இருக்க நான் குமரி மாவட்டத்தை சேர்ந்தவன் இல்லை என்று சொல்வது நியாயம் இல்லை.

கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் ஒழுங்காக செல்வது கிடையாது. எனவே இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். நான் மக்களுக்கு சேவை செய்வதற்காக போட்டியிடுகிறேன். அரசியலில் ஒரு காசு கூட நான் எடுக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மக்களுக்கு சேவை செய்வது, படித்த இளைஞர்களுக்கு வேலை பெற்று கொடுப்பது ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி தான் தேர்தல் பிரசாரம் செய்கிறேன். மேலும் குமரி மாவட்டத்தில் விளையும் பொருட்களை தரம் உயர்த்தி வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். குமரியில் ரப்பர் தொழிற்சாலை மூடி கிடக்கின்றது. அதை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுகம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. மீன்பிடி துறைமுகம் வேண்டும் என்று தான் சொல்கிறேன்“ என்றார்.

Next Story