மதுகுடிக்க பணம் தராததால் மனைவியை கொன்றேன் கைதான தொழிலாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
மதுகுடிக்க பணம் தராததால் மனைவியை கொன்றதாக கைதான தொழிலாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தாராபுரம்,
தாராபுரம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 54). இவரது மனைவி ஜோதி என்கிற ஜோதிமணி (47). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னுச்சாமி பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் தனது மனைவி திடீரென மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள், பொன்னுச்சாமியின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஜோதிமணி தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதை அறிந்த பொன்னுச்சாமி அங்கிருந்து தலைமறைவானார். அதன்பின்னர் ஜோதிமணியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுச்சாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள தில்லாபுரி அம்மன் கோவில் அருகே பொன்னுச்சாமி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று பொன்னுச்சாமியை கைது செய்தனர்.
கைதான பொன்னுச்சாமி போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:–
எனது அக்காள் மகள்தான் ஜோதிமணி. திருமணத்திற்கு பிறகு எங்களுக்கு 2 குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டது. நான் தனியார் சர்க்கரை ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, என்னுடைய இரு கைகளும் எந்திரத்தில் சிக்கி நசுங்கி விட்டது. இதனால் வலது கையும், இடது கையில் 3 விரல்களும் துண்டிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு நாங்கள் கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தோம்.
எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், இந்த பழக்கத்தை ஜோதிமணிக்கும் கற்றுக்கொடுத்தேன். அதன் பிறகு அவளும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். எங்களுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் யாரும் வாடகைக்கு வீடு தரவில்லை.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கோட்டைமேடு பகுதியில் உள்ள, பழைய சித்ரா திரையரங்கத்திற்கு எதிரே குடிவந்தோம். கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜோதிமணி சுயஉதவிக்குழுவில் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த பணத்தை வைத்துக் கொண்டு நாங்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல், தினமும் வீட்டில் இருந்து மது குடித்தோம். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு மதுகுடிக்க ஜோதிமணியிடம் பணம் கேட்டேன். அப்போது அவர் போதையில் இருந்ததால் பணம் மர மறுத்து விட்டார். இதனால் எனக்கும் அவளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த நான் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் காரக்கரண்டியை எடுத்து, ஜோதிமணியின் தலையில் வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். இது பற்றிய தகவல்அறிந்ததும் போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்து தலைமறைவானேன். இப்போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து பொன்னுச்சாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.