இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய பயணிகள் நிழற்குடை


இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய பயணிகள் நிழற்குடை
x
தினத்தந்தி 6 April 2019 3:45 AM IST (Updated: 6 April 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

பஸ்கள் நின்று செல்லாததால் பெரம்பலூர் தெப்பக்குளம் பயணிகள் நிழற்குடை இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து துறையூர், தா.பேட்டை, நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் பெரம்பலூர் கடைவீதி, தெப்பக்குளம், அரசு மருத்துவமனை வழியாக செல்கிறது. இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக பெரம்பலூர் தெப்பக்குளம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருக்கைகளுடன் கூடிய பயணிகள் நிழற்குடை ஒன்று அரசு சார்பில் கட்டப்பட்டது. ஆனால் அந்த பயணிகள் நிழற்குடை பயன்பாட்டில் வந்தபோதும், அதன் முன்பு பஸ்கள் ஏதும் நின்று செல்வதில்லை. மாறாக அதனருகே உள்ள பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்த பழைய கட்டிடம் முன்பு பஸ்கள் நின்று செல்கின்றன.

ஆனால் அங்கு நிழற்குடை ஏதும் இல்லாததால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நீண்ட நேரம் நின்று மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். தெப்பக்குளம் அருகே உள்ள நிழற்குடை முன்பு பஸ்கள் நின்று செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பயணிகள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபாடில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது பகல் நேரத்தில் வெயில் அதிகமாக காணப்படுவதால் அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் வெயிலை சமாளிக்க சேலை, துப்பட்டாவால் தனது தலையை மூடிக்கொள்வதை காணமுடிகிறது.

பஸ்கள் நின்று செல்லாததால் பயன்பாடில்லாமல் போன பயணிகள் நிழற்குடையில் தற்போது பெரம்பலூரில் இருந்து வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், வெளியூர்களில் இருந்து பெரம்பலூருக்கு வேலைக்கு வருபவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை நிழலுக்காக நிறுத்தி செல்கின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடை இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக தற்போது காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெப்பக்குளம் பயணிகள் நிழற்குடையில் பஸ்கள் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்து, நிழற்குடை பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story