மந்திரி ஜி.டி.தேவேகவுடா பங்கேற்ற கூட்டத்தில் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்ட தொண்டர்கள்

மந்திரி ஜி.டி. தேவேகவுடா பங்கேற்ற கூட்டத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட மறுத்த ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மைசூரு,
மைசூருவில் நேற்று தேர்தலையொட்டி ஜனதா தளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மரிதிப்பேகவுடா, மந்திரி ஜி.டி.தேவேகவுடா ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் மந்திரி ஜி.டி.தேவேகவுடா பேசும்போது கூறியதாவது:-
மாநிலத்தில் காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. கூட்டணி தர்மப்படி ஜனதா தளம்(எஸ்) கட்சியும், காங்கிரசும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன. அதனால் ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் எந்த ஒரு மனக்கசப்பும் இல்லாமல் மைசூரு-குடகு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் சங்கருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மோடிக்கு ஆதரவாக கோஷம்
இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமான தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒப்புக்கொள்ளாமல் மறுப்பு தெரிவித்தனர். அவர்கள், காங்கிரஸ் கட்சியினரால் நாங்கள்(ஜனதா தளம்(எஸ்) கட்சியினர்) கோர்ட்டுக்கும், போலீஸ் நிலையங்களுக்கும் அலைந்திருக்கிறோம். அப்போதெல்லாம் எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. ஆனால் இப்போது நாங்கள் மட்டும் ஏன் காங்கிரசாருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
மேலும் காங்கிரசுக்கு ஆதரவாக நாங்கள் யாரும் பிரசாரம் செய்ய மாட்டோம் என்றும் அவர்கள் கூறினர். இந்த சந்தர்ப்பத்தில் கட்சி அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பும், கூச்சல்-குழப்பமும் ஏற்பட்டது.
தேவேகவுடா வருவார்
மேலும் சில தொண்டர்கள் மண்டியா, துமகூரு, ஹாசன் ஆகிய தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினருக்கு காங்கிரசார் ஆதரவாக செயல்படவில்லை. அதனால் மைசூருவில் நாங்கள்(ஜனதா தளம்(எஸ்)கட்சியினர்) காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட மாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து அவர்களிடம் மந்திரி ஜி.டி.தேவேகவுடா பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அவர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் கூட்டம் கூச்சல்-குழப்பத்துடன் எந்தவொரு தீர்மானமும் இன்றி முடிந்தது. பின்னர் நிருபர்களிடம் பேசிய மந்திரி ஜி.டி.தேவேகவுடா, ‘‘ஆதங்கத்தில் உள்ள ஜனதா தளம்(எஸ்) தொண்டர்களை சமாதானப்படுத்த முதல்-மந்திரி குமாரசாமி அல்லது முன்னாள் பிரதமர் தேவேகவுடா யாராவது ஒருவர் வருவார்கள். அவர்கள் தொண்டர்களிடம் பேசி நிலைமையை சரி செய்வார்கள்’’ என்று கூறினார்.
பரபரப்பு
மைசூரு தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






