‘‘எத்தனை பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும் தி.மு.க. வெற்றி பெறாது’’ விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
‘‘எத்தனை பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாது’’ என்று விருதுநகர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
விருதுநகர்,
அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து சிவகாசியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, அங்குள்ள தேவர் சிலை பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:–
மத்தியில் ஒரே கருத்துடைய ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்துக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்ய முடியும். தேவையான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கும். இந்த தேர்தல் மூலமாக நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும். மத்திய அரசில் தி.மு.க. 15 ஆண்டு காலம் அங்கம் வகித்தது. அப்போது எல்லாம் தமிழகத்துக்கு எந்த திட்டமும் அவர்கள் கொண்டு வரவில்லை. அவர்களின் எண்ணம் எல்லாம் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான்.
மத்தியில் பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் அதிக அளவில் வளர்ச்சி பணிகள் நடைபெறும். இந்த பகுதி பட்டாசு தொழில் நிறைந்த பகுதி. பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள ஆலை உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஜெயலலிதாவின் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். இந்த தொழிலுக்கு பிரச்சினை ஏற்பட்டபோது, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி எனது கவனத்துக்கு கொண்டு வந்து பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
பட்டாசு ஆலை உரிமையாளர்களும் என்னை சந்தித்து பேசினார்கள். அவர்கள் தமிழக அரசு கொடுத்து வரும் ஒத்துழைப்புக்கு நன்றியும் தெரிவித்தனர். பட்டாசு தொழில் குறித்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொழிலுக்கு நீதி கிடைக்கும். பல லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் நலனுக்காக பட்டாசு தொழிலை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
சிவகாசி நகராட்சி பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க தாமிரபரணி ஆற்றில் இருந்து, ரூ.102 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணி முடிந்த பின்னர் நகராட்சி பகுதியில் தினமும் குடிநீர் வினியோகம் இருக்கும். திருத்தங்கல் நகராட்சி பகுதிக்கு ரூ.79 கோடி செலவில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் அவர் வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. மக்களுக்கு நன்மை கிடைக்கக்கூடிய அனைத்து திட்டங்களும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சாத்தியமில்லாத பொய்யான பல வாக்குறுதிகள் கூறப்பட்டுள்ளன. அவர்கள் இதுபோல் எத்தனை பொய் வாக்குறுதிகள் கூறினாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
நாங்கள் மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை பற்றி விளக்கிக்கூறி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறோம். ஆனால் தி.மு.க.வினர் என்னையும், அமைச்சர்களையும், கூட்டணி கட்சிகளையும் விமர்சனம் செய்தே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு திட்டங்கள் செயலாக்கம் பெற்றுவருகிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய நகர் பகுதிகளுக்கு கூடுதலாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இம்மாவட்டத்திலுள்ள 732 கிராமங்களுக்கு ரூ.234 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது.
ஏழை மக்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்பதில் இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அந்தவகையில் நகர்ப்புற ஏழைகளுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புற ஏழைகளுக்கு பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. ஜெயலலிதா தென்மாவட்டங்களை தொழில்மயமாக்க வேண்டும் என்று தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் தொழில்வளம் பெருகவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் விருதுநகர்–சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை அமைய உள்ளது. இதற்கான நிலம் கண்டறியப்பட்டு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் வறட்சியால் பாதிப்படைந்தபோது ரூ.56 கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறுவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து அருப்புக்கோட்டையில் பேசினார். பின்னர், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, காரியாபட்டியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன், பொது செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் நிரந்தர பட்டாசு கடை உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்கவும், விண்ணப்பம் கொடுத்த 60 நாட்களில் புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகே தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தி.மு.க. ஏற்கனவே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து பதவியில் இருந்தார்கள். அப்போது மதவாதம் தி.மு.க.விற்கு தெரியவில்லை. வைகோ ம.தி.மு.க. என கட்சி வைத்து கொண்டு, எதற்கு உதயசூரியனில் நிற்க வேண்டும். மத்தியில் எங்களுக்கு பதவி வேண்டும் என கூட்டணி வைக்கவில்லை. மக்கள் நலனுக்காக கூட்டணி வைத்துள்ளோம். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க.தான். வேலூரில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. கையும் களவுமாக மாட்டி உள்ளனர். பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்க தி.மு.க. நினைக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைத்தால் நாட்டை பட்டா போட்டு விடுவார்கள்’’ என்று பேசினார். இந்த பிரசாரத்தின் போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உடன் இருந்தார்.