மதுரை ரெயில் நிலையத்தில் வேலைக்கு அழைத்து செல்லப்படும் குழந்தைகள் கண்காணிப்பு
வேலைக்காக அழைத்து செல்லப்படும் குழந்தைகள் குறித்து மதுரை ரெயில் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டது.
மதுரை,
பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கோடை விடுமுறைக்கு தாத்தா, பாட்டி வீடுகளுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும் செல்வது வழக்கம். மதுரை மற்றும் நெல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெற்றோர் பலர் விடுமுறைக்காலத்தில் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, மும்பை போன்ற இடங்களுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், ரெயில்களில் குழந்தைகளை வேலைக்கு அனுப்புபவர்களை கண்காணிக்க தமிழக ரெயில்வே போலீஸ் சார்பில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மதுரை ரெயில் நிலையத்தில் வேலைக்கு அழைத்துச்செல்லப்படும் குழந்தைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
மேலும், இது போன்று ரெயில்களில் செல்லும் குழந்தைகள் பற்றி தெரிய வந்தால், சக பயணிகள் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை ரெயில்நிலையத்தில் நேற்று நடந்தது. ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், ரெயில்களில் செல்லும் பயணிகள் ஆகியோருக்கு இது குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
அதேபோல, நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும், வேலைக்கு அழைத்துச்செல்லப்படும் குழந்தைகள் குறித்து 1098, 182 மற்றும் 1512 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல்களை தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story