ராகுல் காந்தியை யார் முன்மொழிகிறார்கள்? எதிர்க்கட்சிகளால் திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க முடியாது மதுரை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு


ராகுல் காந்தியை யார் முன்மொழிகிறார்கள்? எதிர்க்கட்சிகளால் திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க முடியாது மதுரை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 5 April 2019 11:15 PM GMT (Updated: 5 April 2019 10:56 PM GMT)

எதிர்க்கட்சிகளால் திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க முடியாது என்று மதுரை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மதுரை,

மதுரை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை பசுமலை பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, வேட்பாளர் ஆகியோர் உடன் சென்றனர். பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஸ்டாலின் பேசுகிறார், முதல்-அமைச்சருக்கு கூட்டம் இல்லை என்று. இங்கு இருக்கும் கூட்டம் போடும் சத்தம் அவருக்கு தெரியவில்லை. நமது கட்சியின் வலிமை, கூட்டணி கட்சியினரின் வலிமை தெரியாமல் அவர் பேசுகிறார். இன்றைக்கு தமிழகத்தில் வலிமை மிக்க கூட்டணி, மெகா கூட்டணி நமது கூட்டணி தான். கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிகள், வாக்கு வங்கி உள்ள கட்சிகள், தேசத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று உருவாக்கப்பட்ட இயக்கங்கள்.

தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. வைகோ முன்பு கூறும் போது தி.மு.க. குடும்ப கட்சி என்றார். ஆனால் தற்போது அவர், ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்று கூறுகிறார். அப்படி என்றால் இதில் எந்த கட்சி சந்தர்ப்பவாத கட்சி? வைகோ ம.தி.மு.க. என்ற கட்சியை நடத்துகிறார். அதற்கு என்று சின்னம் இருக்கிறது. ஈரோட்டில் ம.தி.மு.க வேட்பாளர் போட்டியிடுகிறார். ஆனால் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அப்படி என்றால் நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள். ம.தி.மு.க.வா அல்லது தி.மு.க.வா? உங்கள் கட்சியை இணைத்து விட்டீர்களா? எனவே தான் நாங்கள் அதனை சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறோம்.

அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் நாடு செழிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு அனைத்து திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டணி அமைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகம் வளர்ச்சி பாதையில் பீடு நடை போட வேண்டும். ஆனால் தி.மு.க.வினர் எண்ணம் அப்படியில்லை. அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக அமைத்துள்ளனர்.

15 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வாய்ப்பு தி.மு.க.விற்கு இருந்தது. அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்? நாடு கண்ட பலன் என்ன? ஆனால் அவர்கள் குடும்பம் கண்ட பலன். மாறி, மாறி அமைச்சர்களாகி வலம் வந்தது தான் மிச்சம். கட்சியில் என்ன உங்களுக்கு பட்டாவா போடப்பட்டு உள்ளது? கட்சியில் வேண்டுமானால் அவ்வாறு வரமுடியும். நாட்டில் அவ்வாறு வரமுடியாது. இன்றைய தினம் அ.தி.மு.க. மக்களுக்காக குரல் கொடுக்கிற இயக்கம். மக்கள் எண்ணுகின்ற அனைத்தையும் நிறைவேற்றுகிறது இந்த அரசு. எனவே அ.தி.மு.க.வை விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.

ஸ்டாலின் என்னென்னவோ பேசுகிறார். அவர் மதுரைக்கு வந்த போது என்ன பேசினார் என்று அவருக்கே தெரியவில்லை, கதை ஒன்றை சொல்லி விட்டு சென்று விட்டார். திறமையான பிரதமர் வரவேண்டும். ஏன் என்றால் நாட்டின் நிலைமையை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நாடு பாதுகாப்பாக இருந்தால் தான் நாம் மதுரையில் பாதுகாப்பாக தூங்க முடியும், வாழ முடியும். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற தகுதி வாய்ந்த பிரதமர் நரேந்திர மோடிதான்.

நாம் பிரதமர் வேட்பாளரை சொல்கிறோம். எதிர்க்கட்சியில் பிரதமர் யார் என சொல்லி இருக்கிறார்களா? ஸ்டாலின் மட்டும் தான் ராகுல்காந்தி என்று கூறிவருகிறார். அதை கூட தமிழ்நாட்டில் தான் அவர் தெரிவித்துள்ளர். ஆனால் மேற்குவங்காளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் போது, கூட்டணி கட்சி எல்லாம் ஒன்றாக கூடி முடிவு செய்து தேர்தல் முடிந்த பிறகு பிரதமரை தேர்ந்தெடுப்போம் என்றார்.

நீங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்று வரை கூறவில்லை. வெற்றி பெற்றால் தானே பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும். வேட்பாளர் தெரியாமல் எப்படி மக்கள் உங்களுக்கு ஓட்டு போடுவார்கள். பிரதமர் யார் என்று முன் வைத்தால் தானே மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள். பிரதமர் பெயர் தெரிந்தால் தானே மக்கள் சிந்தித்து அந்த கூட்டணிக்கு வாக்களிப்பர்கள். ஆனால் நாங்கள் வெற்றி பெற்றால் எதிர்கால பிரதமர் நரேந்திர மோடி என்று அறிவித்து விட்டோம். இன்னும் பிரதமர் வேட்பாளரையே முடிவு செய்யாத கட்சிகள் எல்லாம் மத்தியில் எப்படி நிலையான ஆட்சியை தர முடியும்?

மாயாவதி பேசும் போது தனக்கு 4 முறை முதல்-அமைச்சராக இருந்த அனுபவம் உள்ளது என்கிறார். எனக்கு பிரதமராகும் வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக நிர்வாகம் செய்வேன் என்று கூறுகிறார். ஆந்திராவில் சந்திராபாபுநாயுடுவுக்கு பிரதமர் ஆக வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தனக்கு எவ்வளவு இடங்களில் வெற்றி கிடைக்கிறது. அதன் மூலம் காய் நகர்த்தி பிரதமராகலாம் என்று ஆசை அவருக்கு உள்ளது. ஆகவே மாநிலத்திற்கு மாநிலம் பிரதமராக வேண்டும் என்று எண்ணத்தோடு இருப்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, திறமையான பிரதமரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்? நிச்சயம் முடியாது.

பாரதீய ஜனதா கட்சி பல்வேறு மாநிலங்களில் கூட்டணி அமைத்துள்ளார்கள். அங்கு எல்லாம் பிரதமராக நரேந்திர மோடி தான் இருப்பார் என்று கூறுகிறார்கள். எல்லா மாநிலத்தில் உள்ள கூட்டணி தலைவர்களும் அடுத்த பிரதமர் நரேந்திர மோடி தான் என்று கூறுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒருமித்த குரலில் யாரும் முன்மொழிகிறார்களா?

எனவே மக்கள் வளமோடு வாழ வேண்டும் என்று நாங்கள் மெகா கூட்டணி அமைத்திருக்கிறோம். நமது வெற்றி வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story