திருப்பனந்தாள் அருகே கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் வீட்டுமனைப்பட்டா வழங்க கோரிக்கை


திருப்பனந்தாள் அருகே கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் வீட்டுமனைப்பட்டா வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 April 2019 4:30 AM IST (Updated: 7 April 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

திருப்பனந்தாள் அருகே வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள கொடியாலம், கூத்தனூர், உக்கடை உள்ளிட்ட கிராமங்களில் விவசாய தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள்.

இப்பகுதியில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டதால் இந்த கிராமங்களை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூத்தனூர் என்ற கிராமத்தின் பெயரை சங்கராபுரம் என்று பெயர் மாற்றியதை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கொடியாலத்தில் கூத்தனூர், உக்கடை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் அறிவித்தனர். 

Next Story