நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் அணிவகுப்பு


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் அணிவகுப்பு
x
தினத்தந்தி 7 April 2019 4:15 AM IST (Updated: 7 April 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் அணிவிப்பு நடைபெற்றது.

அய்யம்பேட்டை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாபநாசம் ஊரக உட்கோட்ட காவல் துறை சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் நேற்று மாலை பாபநாசத்தில் இருந்து அய்யம்பேட்டை வரை போலீசார் அணிவகுப்பு நடத்தினர். பாபநாசத்தில் புறப்பட்ட போலீசாரின் அணிவகுப்பு ராஜகிரி, பண்டாரவாடை, வழுத்தூர், சக்கராப்பள்ளி ஆகிய ஊர்களின் வழியாக அய்யம்பேட்டையை வந்தடைந்தது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், நாகரத்தினம், விஜயகுமார், ஆனந்த பத்மநாபன் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

இதேபோல திருச்சிற்றம்பலம் காவல் சரக பகுதியில் உள்ள திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, ஆவணம் ஆகிய இடங்களில் அமைய உள்ள வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாக்குச்சாவடிகள் அமைய உள்ள இடங்களில் நேற்று மாலை போலீசார் அணிவகுப்பு நடத்தினர். இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியில் நேற்று போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.


Next Story