பிரசவத்தில் தாய், சிசு இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்துள்ளது கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்


பிரசவத்தில் தாய், சிசு இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்துள்ளது கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்
x
தினத்தந்தி 6 April 2019 11:00 PM GMT (Updated: 6 April 2019 7:52 PM GMT)

பிரசவத்தின் போது தாய், சிசு இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்துள்ளது என்றும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெரு மிதமாக கூறினார்.

திருச்சி,

இந்திய மற்றும் தமிழ்நாடு எலும்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்தியா-ஜப்பான் நாடுகளை சேர்ந்த கை காய சிகிச்சை நிபுணர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முதன் முதலாக திருச்சியில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:-

பொது சுகாதார சட்டத்தை முதன் முதலில் அமல்படுத்தியது தமிழகம் தான். மருத்துவ நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் தமிழகம் முக்கியமான மையமாக எப்போதும் இருந்து வருகிறது. ஆசியாவிலேயே பழமையான அரசு மருத்துவமனை மற்றும் அரசு கண் மருத்துவமனை சென்னையில் அமைந்துள்ளது.

பிரசவத்தின் போது தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்து ஒரு பதிவை பெற்றுள்ளது. தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தனியார் மருத்துவமனைகளும் மருத்துவ சிகிச்சையை ஈடுபாட்டுடன் அளித்து வருகிறது. குழந்தை இறப்பு தடுப்பில் நாட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. மேலும் மருத்துவத்தில் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இருப்பது பெருமையாக உள்ளது.

நாட்டில் பொது சுகாதார நலனில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. உலகின் கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள சுற்றுலாவில் தமிழகத்திற்கு வருகின்றனர். நாட்டின் மருத்துவ கல்வியும், மருத்துவ அறிவியலும் புகழ்பெற்று விளங்குகிறது.

இந்திய மருத்துவர்கள் திறமை மிக்கவர்கள். மருத்துவர்கள் மனிதநேயத்துடனும், அர்ப்பணிப்போடும் பணியாற்ற வேண்டும். மருத்துவர்களை நோயாளிகள் பார்க்கும் போது தமக்கு நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட வேண்டும். மருத்துவரின் புன்னகையே நோயாளியை குணமாக்கிவிடும். கடவுளுக்கு அடுத்ததாக மருத்துவர்கள் திகழ்கின்றனர். ஒரு உயிரை காப்பாற்றக்கூடிய தகுதி மருத்துவரிடம் மட்டுமே உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சிறந்த எலும்பு மருத்துவ நிபுணர்களுக்கு அவர் விருதுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த எலும்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு கை காயங்களுக்கு உள்ள நவீன மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துக்கூறினர். மேலும் உலக அளவில் நுண் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் பேசினர். இதில் எலும்பு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும், மருத்துவர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டெரன்ஸ் ஜோஸ் ஜெரோம் வரவேற்று பேசினார். முடிவில் செயலாளர் பிரான்சிஸ் ராய் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Next Story