திருச்சி அருகே பெயிண்ட் கடை-குடோனில் பயங்கர தீ விபத்து


திருச்சி அருகே பெயிண்ட் கடை-குடோனில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 7 April 2019 4:30 AM IST (Updated: 7 April 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே பெயிண்ட் கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

திருச்சி,

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் ரைஸ்மில் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன். இவருடைய மகன் பாலகிருஷ்ணன்(வயது 43). இவர் திருச்சி-தஞ்சை சாலையில் காட்டூர் அருகே நியூபிரியா டிரேடர்ஸ் என்ற பெயரில் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடை தரை தளம், முதல் தளம், 2-ம் தளம் என 3 தளங்களாக உள்ளன.

தரை தளத்தில் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ், பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்ட பொருட்களுக்கான குடோனும், முதல் தளத்தில் பொருட்கள் விற்பனையும், 2-வது தளத்தில் மற்றொரு குடோனும் உள்ளது. நேற்று மாலை 5.45 மணி அளவில் தரைதளத்தில் உள்ள குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மள, மளவென வேகமாக பரவியது. இதில் குடோனில் இருந்த பெயிண்ட் வாளிகள், எலக்ட்ரிக் பொருட்கள் ஆகியவை தீப்பிடித்து எரிய தொடங்கின. உடனே கடையில் முதல் தளத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் அந்த பகுதியில் வாக்கு சேகரிக்க வருவதாக இருந்தது. இதையொட்டி அங்கு திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்து விட்டு, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையம், நவல்பட்டு, பாய்லர் ஆலை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாநகராட்சி குடிநீர் டேங்கர் லாரியிலும் தண்ணீரை கொண்டு வந்து மொத்தம் 5 வாகனங்களில் இருந்த தண்ணீர் மூலம் தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் தீயை அணைக்க போதுமான இடவசதி இல்லாததால் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடத்தை இடித்து தீயை அணைக்க முயன்றனர். இந்த தீ விபத்தால் திருச்சி-தஞ்சை சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தீ விபத்தில் கடை மற்றும் குடோனில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே நள்ளிரவு வரை தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்தது. 

Next Story