தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் “தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்” கனிமொழி எம்.பி. பேச்சு


தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் “தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்” கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 7 April 2019 3:30 AM IST (Updated: 7 April 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலையில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் அருகே உள்ள விட்டிலாபுரம் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிசுவநாதன் தலைமையில் கனிமொழி எம்.பி. பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

பா.ஜனதா ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டம் அனைவருக்கும் தெரியும். ஸ்டெர்லைட் பிரச்சினையில் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் மிக மோசமாக மக்களை நடத்தினர். ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் கொல்லப்பட்டனர். தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அ.தி.மு.க. அரசு தவறு செய்தவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

மத்தியில் இருக்கும் பா.ஜனதா ஆட்சி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வை கொண்டு வந்து நமது பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நிலைக்கு உருவாக்கி உள்ளது. நாம் அந்த பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவர்களோடு சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் இது. இதனை புரிந்து கொண்டு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.

தி.மு.க. வாக்குறுதி கொடுத்தால் அதனை நிறைவேற்றி தரக்கூடிய இயக்கம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாய கடன்களை ரத்து செய்து தருவதாக அறிவித்து உள்ளார். நிச்சயம் ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். 100 நாள் வேலை என்பது 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும். 1 கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர்களான வேலை வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பை மக்கள் எங்களுக்கு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜமன்னார், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து அவர் கோவில்பட்டி நகரில் வக்கீல் தெரு, பாரதி நகர்,மேட்டுத்தெரு, சாஸ்திரி நகர், அண்ணாநகர், வீரவாஞ்சி நகர், சாந்திநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்த கனிமொழி, எம்.பி. சுப்பிரமணியபுரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது அவர் பேசுகையில்,‘ பா.ஜனதா அரசின் ஜி.எஸ்.டி. வரியால் கடலைமிட்டாய், தீப்பெட்டி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார். அவருடன் தொகுதி பொறுப்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், பாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்பட திரளான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு கருங்குளம் ஒன்றியம் மணல்விளை, புதுக்குளம்,அரசர்குளம் ஆகிய இடங்களில் வாக்கு கேட்டு அவர் பிரசாரம் செய்தார். அரசர்குளத்தில் உள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கனிமொழி, எம்.பி. பேசியதாவது:- தாமிரபரணி ஆற்றில் கிடப்பில் போடப்பட்டு உள்ள வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தது. அந்த திட்டம் செயல்பட்டால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் வற்றாமல் பாதுகாக்கப்படும். விளைச்சல் அதிகரிக்கும். தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் பல கோடி ரூபாய் வீணாகியுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நல்லமுத்து, பொதுக்குழு உறுப்பினர் கணேசன், பொருளாளர் கோபால் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story