அ.தி.மு.க. அரசை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்
விவசாயி தானே கவிழ்த்து விடலாம் என மு.க.ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அ.தி.மு.க. அரசை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று வத்தலக்குண்டு பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வத்தலக்குண்டு,
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் பிரசாரம் செய்தார். அங்கு நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து ஆகியோரை ஆதரித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:–
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. சுமார் 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள். எனவே, நமது நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. நாடு பாதுகாப்பாக இருந்தால் தான், மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். அதேபோல் திறமையான பிரதமர் ஆட்சியில் இருக்க வேண்டும். எனவே, நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்.
இதற்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழம் சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதேபோல் சதிகாரர்களின் சூழ்ச்சியால் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு வெளியே சென்று எம்.எல்.ஏ. பதவியை இழந்தனர்.
எனவே, நிலக்கோட்டை இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அதற்கு இரட்டை இலை சின்னத்தில் நீங்கள் வாக்களித்து, அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழியை வெற்றிபெற வைக்க வேண்டும்.
மேலும் தொண்டர்களாகிய நீங்கள் ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்தீர்கள். தொண்டர்களாகிய நீங்கள் தான் கட்சி. நீங்கள் தான் ஆட்சி. தொண்டர்கள் நினைப்பது தான் நடக்கும். ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ஆனால், மு.க.ஸ்டாலின் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என்று கூறுகிறார்.
நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, முதல்–அமைச்சராகி இருக்கிறேன். அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் முதல்–அமைச்சர் பதவிக்கு வரமுடியும். நான் கிளை செயலாளராக கட்சி பணியை தொடங்கி, படிப்படியாக இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். ஆனால், மு.க.ஸ்டாலின் அவருடைய அப்பா தயவால் பதவிக்கு வந்தார்.
விவசாயி, முதல்–அமைச்சராக இருப்பதால் மு.க.ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியவில்லை. விவசாயி தானே, ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று நினைத்தார். ஆனால், அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை. நல்லதை நினைத்தால் தான் நல்லது நடக்கும். இது மக்களின் அரசு. அ.தி.மு.க. அரசை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
தமிழகத்தில் ஊழல் நடப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, தி.மு.க.வின் ஆட்சி தான் என்பதை யாரும் மறந்து விடவில்லை. அழகுநிலையம் நடத்தும் பெண்ணை தி.மு.க. பிரமுகர் தான் தாக்குகிறார். மற்றொரு தி.மு.க. பிரமுகர், பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுக்கிறார்கள். மறுநாள் சென்று மு.க.ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் சட்டம்–ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதேபோல் கல்வி, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், போக்குவரத்து என பல்வேறு துறைகளுக்கு விருது பெற்ற மாநிலம் தமிழகம் தான். தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. ஜெயலலிதா முதல்–அமைச்சரானதும், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினார். தற்போது 6 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
மாணவர்களுக்கு உயர்தர கல்வி கிடைக்க மடிக்கணினி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, 100 யூனிட் இலவச மின்சாரம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். எந்த துறையிலும் குறை சொல்ல முடியாது. மு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் கூட, குறை தெரியாது. தற்போது நடைபெற இருப்பது நாடாளுமன்ற தேர்தல். ஆனால், மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையாக பலவற்றை கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது அ.தி.மு.க., நான் முதல்–அமைச்சர். நாங்கள் தானே திட்டங்களை கொண்டு வரமுடியும். மு.க.ஸ்டாலின் எப்படி திட்டங்களை கொண்டு வருவார். தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்துக்காக, மு.க.ஸ்டாலின் நாடகம் போடுகிறார். இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்கு மத்தியில் மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் நிறைய திட்டங்களை கொண்டு வரமுடியும். எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து நிலக்கோட்டையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நம்மை எதிர்த்து நிற்கும் துரோகிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காத அளவுக்கு அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும். மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின் போது, பிரதமர், முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களை பற்றி அவதூறாக பேசுகிறார்.
இவர் என்ன அகில இந்திய தலைவரா?. கருணாநிதி பேசமுடியாத நிலையில் இருந்தபோது கூட, மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக முடியவில்லை. அவருடைய தந்தையே அவரை நம்பவில்லை. அப்போது அவர் செயல் தலைவராகவே இருந்தார். தந்தையே நம்பாத போது மக்கள் மு.க.ஸ்டாலினை எப்படி நம்புவார்கள். மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பொய் பிரசாரம் செய்கிறார்.
மேலும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, மு.க.ஸ்டாலின் அறிவித்ததை கூட்டணி கட்சிகள் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை அனைத்து கூட்டணி கட்சியினரும் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் புதிய தொழில் நுட்பத்துடன் கால்நடை மருத்துவமனை கொண்டுவரப்படுகிறது. இந்து வன்னியர்களுக்கு வழங்கப்படும் சலுகையை, கிறிஸ்தவ வன்னியர்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதேபோல் தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற ஒருமித்த சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வத்தலக்குண்டுவில் காளியம்மன்கோவில் சந்திப்பில் முதல்–அமைச்சரின் பேச்சை கேட்க தொண்டர்கள் குவிந்து இருந்தனர். தொண்டர்களின் நடுவே வேனில் நின்றபடி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆனால், தொண்டை வலி காரணமாக குரல் மாறி இருந்தது. மேலும் பேசுவதற்கு சிரமப்பட்டார். எனினும், அவ்வப்போது வெந்நீர் குடித்தபடி 20 நிமிடங்கள் தொடர்ந்து பேசினார். பிரசார வேனை சுற்றிலும் நின்ற தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி பேசினார். இதனால் தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பியடி அவருடைய பேச்சை ரசித்தனர்.