திண்டுக்கல்லில் மோட்டார்சைக்கிள் மூலம் 3 கி.மீ. தூரம் சங்கிலியுடன் நாயை இழுத்து சென்ற மர்ம நபர்கள் பிராணிகள் நலச்சங்கத்தினர் புகார்
திண்டுக்கல்லில் மோட்டார்சைக்கிள் மூலம் 3 கி.மீ. தூரம் சங்கிலியுடன் நாயை இழுத்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் காந்திஜிநகரை சேர்ந்தவர் தமிழரசன். இவர், குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு நாய் மீது பிரியம் அதிகம். இதனால் தனது நிறுவனத்தில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று நிறுவனத்தில் நாயை, சங்கிலியில் கட்டி வைத்து இருந்தார்.
மாலையில் வந்து பார்த்த போது நாயை திடீரென காணவில்லை. இதனால் பல இடங்களில் அவர் தேடினார். அப்போது மோட்டார்சைக்கிளில் 2 பேர், ஒரு நாயை சங்கிலியுடன் இழுத்து செல்வதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து நகர் முழுவதும் அவர், தனது நாயை தேடினார். இதற்கிடையே அண்ணாநகரில் அவருடைய நாய் படுகாயத்துடன் கிடந்தது.
சுமார் 3 கி.மீ. தூரம் நாயை இழுத்து சென்ற மர்ம நபர்கள் அண்ணாநகரில் விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து நாயை மீட்டு, திண்டுக்கல் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். மேலும் நாயை 3 கி.மீ. தூரம் இழுத்து சென்று துன்புறுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, திண்டுக்கல் பிராணிகள் நலச்சங்க செயலாளர் ரமேஷிடம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து பிராணிகள் நலச்சங்கத்தினர் விசாரணை நடத்தினர். அப்போது தமிழரசனின் நாயை, அந்த நபர்கள் மோட்டார்சைக்கிளை ஓட்டியபடி இழுத்து செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் பிராணிகள் நலச்சங்க செயலாளர் ரமேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.