ஆண்டிப்பட்டியில் போலி பட்டா தயார் செய்து அரசு நிலம் 300 பேருக்கு விற்பனை 2 பேர் கைது
ஆண்டிப்பட்டியில் போலி பட்டா தயார் செய்து அரசு நிலத்தை 300 பேருக்கு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி (வயது31). இவரும், ஆண்டிப்பட்டியை சேர்ந்த முத்து (40), சின்னமனூரை சேர்ந்த வைரம் ஆகியோரும் சேர்ந்து ஆண்டிப்பட்டியில் உள்ள அரசு பிற்பட்டோர் நலத்துறைக்கு சொந்தமான நிலத்திற்கு போலி பட்டா தயார் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து, ஒரு மனை ரூ.15 ஆயிரம் வீதம் 300 பேருக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்த பிரச்சினை குறித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரசு பிற்பட்டோர் நலத்துறைக்கு தெரிய வந்தது. ஆனால் இந்த செயலை செய்தது யார்? என்று தெரியாமல் இருந்தது. இதையடுத்து நிலம் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை செய்யப்பட்டது.
இதில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலரின் போலியான கையெழுத்து போடப்பட்டு, அவரது ‘சீல்‘ போலியாக தயார் செய்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சாந்தி ஆண்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சவுந்தரபாண்டி, முத்து, வைரம் ஆகிய 3 பேர் மீது ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து போலிபட்டா தயார் செய்து அதை உண்மை என்று சொல்லி பொதுமக்களையும், அரசையும் ஏமாற்றி நிலம் விற்பனை செய்ததாக சவுந்தரபாண்டி, முத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய வைரம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.