மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மீனபரணி கொடை விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மீனபரணி கொடை விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 7 April 2019 10:30 PM GMT (Updated: 7 April 2019 2:40 PM GMT)

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மீனபரணி கொடைவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக்கொடை விழா கடந்த மாதம் (மார்ச்) 3–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12–ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. அதன்பின் 19–ந் தேதி எட்டாம் கொடை விழா நடந்தது.

 இந்தநிலையில் மீனபரணி கொடைவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனிவருதல், மதியம் 12.30 மணிக்கு உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை, அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல் போன்றவை நடந்தது. நள்ளிரவில் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடந்தது.

ஆண்டில் 3 முறை  

ஒரு ஆண்டில் 3 முறை மட்டுமே நடக்கும், இந்த பூஜை மாசி திருவிழாவின் 6–ம் நாள், மீனபரணி கொடைவிழா, கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும். வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அப்போது அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மீனபரணி கொடை விழாவையொட்டி பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலை சுற்றியும், அருகில் உள்ள தென்னந்தோப்புகளிலும் பொங்கலிட்டு வழிபட்டனர்.

விழா ஏற்பாட்டை இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், மராமத்து பொறியாளர் அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story