சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 65 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 65 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 April 2019 4:00 AM IST (Updated: 7 April 2019 9:48 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 65 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் தாய்லாந்து செல்ல வந்த சென்னையை சேர்ந்த வெங்கடேசன்(வயது 24) என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் இருந்த பையை ஸ்கேன் செய்து பார்த்ததில் அதில் உயிருள்ள ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதுபோல் இருந்தது.

இதனால் அந்த பையை திறந்து பார்த்தனர். அதில் 2 ‘ஹாட் பாக்ஸ்கள்’ இருந்தன. சந்தேகத்தின்பேரில் அதை திறந்து பார்த்தபோது, அதில் உயிருள்ள 65 நட்சத்திர ஆமைகள் இருந்தன.

அந்த நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நட்சத்திர ஆமைகளுடன் பிடிபட்ட வெங்கடேசனைசென்னை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த வகை ஆமைகள் தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுவதால் அவர் தாய்லாந்துக்கு கடத்த முயன்றது தெரிந்தது.

இந்த நட்சத்திர ஆமைகள் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது?, யாருக்காக அவற்றை சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்றார்? என பிடிபட்ட வெங்கடேசனிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story