கிருஷ்ணகிரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கிருஷ்ணகிரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் உள்பட 15 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 1,850 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 307 வாக்குச்சாவடி மையங்களுக்கான 307 வாக்குப்பதிவு எந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், வி.வி.பேட் ஆகியவை மற்றும் கூடுதல் வாக்ப்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல மாவட்டத்தில் உள்ள பிற சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story