காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் இடையே குழப்பங்களை சரிசெய்துள்ளோம் தினேஷ் குண்டுராவ், சித்தராமையா கூட்டாக பேட்டி
காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் இடையே இருந்து வந்த குழப்பங்களை சரிசெய்துள்ளோம் என்று தினேஷ் குண்டுராவும், சித்தராமையாவும் கூட்டாக தெரிவித்தனர்.
மைசூரு,
மைசூருவில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் தனியார் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் எச்.விஸ்வநாத், மாவட்ட பொறுப்பு மந்திரி ஜி.டி.தேவேகவுடா, மந்திரி சா.ரா.மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் கட்சி தொண்டர்கள் இடையே குழப்பங்கள் இருந்தது உண்மைதான். ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து வந்தார்கள். அதை எல்லாம் நாங்கள் சரி செய்துள்ளோம். தொண்டர்களை சமாதானப்படுத்தி இருக்கிறோம்.
கூட்டணி ஆட்சி இருப்பதால், கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்ய வேண்டும், இது கட்சி மேலிடத்து உத்தரவு என்று அவர்களிடம் எடுத்துக்கூறி உள்ளோம். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
மைசூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் சங்கர் போட்டியிடுகிறார். சாம்ராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் துருவ நாராயண் போட்டியிடுகிறார். அவர்களுக்கு ஆதரவாக ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பிரசாரம் மேற்கொள்வார்கள். இனி இந்த 2 கட்சிகள் இடையே எந்த குழப்பமும் இல்லை. ஒற்றுமையாக இருப்போம்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.
இதையடுத்து பேசிய மந்திரி ஜி.டி.தேவேகவுடா, ‘‘சித்தராமையாவும், நானும் ஒற்றுமையாக இருக்கிறோம். இருவரும் ஒன்றாகவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். எங்களுக்குள் எந்த மனஸ்தாபமும் இல்லை. கடந்த தேர்தல் சமயத்தில் எங்களுக்குள் நடந்ததையெல்லாம் மறந்து இருக்கிறோம்’’ என்று கூறினார்.
Related Tags :
Next Story