அ.தி.மு.க. ஆட்சியில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் கூட ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் கூட ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 8 April 2019 4:45 AM IST (Updated: 8 April 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் கூட ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாது என்று குனியமுத்தூர் பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கோவை,

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குசேகரிப்பதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சுந்தராபுரம், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–

திறமையான பிரதமரை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தல் இது. ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் நடப்பதை போல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வாக்கு பெற முயற்சிக்கிறார். தமிழக வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிந்தவர்கள். 2 ஏக்கர் நிலம் தருவதாக பச்சை பொய்யை சொன்னவர் தான் முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி. அனைத்து குடும்பத்துக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்தது எங்கள் அரசு. தேர்தல் முடிந்தவுடன் ஏழை குடும்பத்தினருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்கும். தமிழ்நாட்டில் முதல் முறையாக கான்கிரீட் சாலை பொள்ளாச்சி– கோவை இடையே அமைக்கப்பட்டு உள்ளது.

மு.க.ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக வைத்து உள்ளார். அவர் ஆட்சியில் இருந்தபோது செய்த சாதனைகளை சொல்ல அவரால் முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கு அ.தி.மு.க. அரசு அரணாக உள்ளது. ஹஜ் பயணம் செய்ய மானியத்தை மத்திய அரசு நிறுத்தியது. அதை அ.தி.மு.க. அரசு தான் வழங்கியது. முத்தலாக் சட்டத்தை ஆதரிக்க மத்திய அரசு கேட்டபோது அ.தி.மு.க. அரசு எதிர்த்ததால் அந்த சட்டம் அமலாகப்படவில்லை. கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகாலங்களில் இல்லாதவகையில் மிகப்பெரிய வளர்ச்சியை எங்கள் அரசு செய்து உள்ளது.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை. மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் தான். ஆனால் அவர் அரசியல் வியாபாரி. அவர் அ.தி.மு.க., உள்ளாட்சி அமைச்சர், என்னை பற்றியெல்லாம் எல்லை மீறி பேசி வருகிறார். அவர் தி.மு.க.வில் எப்படி அமைச்சர் ஆனார், துணை முதல்–அமைச்சர் ஆனார் என்பது எல்லாம் எங்களுக்கு தெரியும். நான் எப்படி முதல்–அமைச்சர் ஆனேன் என்று தெரிந்துகொள்ளுங்கள். நான் படிக்கும் காலங்களில் எனது சொந்த ஊர் சிலுவம்பாளையத்தில் கிழக்கு மாவட்ட செயலாளராக எனது பணியை தொடங்கினேன்.

பிறகு ஒன்றிய பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளர், மாநில பொறுப்பாளர், சட்டமன்றம், நாடாளுமன்றம் என படிப்படியாக உயர்ந்து உழைத்து கட்சியில் ஜெயலலிதா பொறுப்புகள் கொடுத்து தற்போது முதல்–அமைச்சராக உள்ளேன். ஆனால் மு.க.ஸ்டாலின் தந்தை தி.மு.க. தலைவர் முதல்–அமைச்சராக இருந்தார். அவரின் செல்வாக்கில் மு.க.ஸ்.டாலின் எம்.எல்.ஏ. ஆனார். பிறகு அமைச்சர், செயல்தலைவர் தற்போது தி.மு.க. தலைவராக உள்ளார். அவர் உழைக்காமலேயே இவ்வாறு கெத்து இருந்தால் உழைக்கும் எங்களுக்கு எவ்வளவு கெத்து இருக்கும். எனவே தயவு செய்து எங்களை குறைத்து மதிப்பிட கூடாது.

உழைக்கிறவர்களுக்கு பலம் அதிகம். கட்சி மக்களுடைய எண்ணங்களை புரிந்து நாங்கள் வந்து இருக்கிறோம். குற்றச்சாட்டு கூறும்போது பார்த்து சொல்ல வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் மீது பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் கூட ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாது. முதல்–அமைச்சரை கேடி என்றும், உங்கள் தொகுதியை சேர்ந்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்தும் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து உள்ளார். இந்தியாவிலேயே 100 யூனிட் மின்சாரம் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கும் அரசு ஜெயலலிதாவின் அரசு ஆகும். மேலும் தடையின்றி மின்சாரம் வழங்கி வருகிறோம்.

இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்த மு.க.ஸ்டாலின் என்னை பற்றியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் பற்றியும் பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவருடைய கனவு நிறைவேறவில்லை. அந்த ஆத்திரத்தில் அவர் பேசிவிட்டு போய் உள்ளார். அவர் என்ன நினைத்தார் என்றால், ஜெயலலிதா இற்நதவுடன் இந்த ஆட்சி கொஞ்ச நாட்களுக்கு தான் இருக்கும் என்று நினைத்தார். டி.டி.வி. தினகரனால் கட்சி இரண்டாக உடையும் என்று நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்த தேர்தலில் நாம் மெகா கூட்டணி அமைத்திருப்பது அவருக்கு வயிற்றெரிச்சல். உள்ளாட்சி துறை அமைச்சரின் சிறப்பான செயல்பாடுகளினால் மத்திய அரசின் 20 விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தொண்டாமுத்தூர் தொகுதியில் கூட்டுக்கு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை உள்ளாட்சி துறை அமைச்சர் நிறைவேற்றியுள்ளார். அரசு கலை கல்லூரி, அரசு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள், கான்கிரீட் சாலைகள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இந்த பகுதியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிறைவேற்றியுள்ளார். ஆனால் இதையெல்லாம் மறைத்து மு.க.ஸ்டாலின் ஏதோ உளறி விட்டு போயிருக்கிறார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அவர் தமிழகத்துக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தார். அவரை விட 3 மடங்கு அதிகமான திட்டங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிறைவேற்றியுள்ளார். உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. நடத்தாமல் தள்ளி வைத்து வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அது தவறு. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதை எதிர்த்து முதலில் வழக்கு போட்டது யார்?. தி.மு.க. தான். ஆனால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி அமைப்புகள் இருந்தால் எப்படி பணிகள் நடக்குமோ அதுபோல வளர்ச்சிப்பணிளை நிறைவேற்றி வருகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர்கள் கடுமையானை விதிகளை பின்பற்றி தான் கொடுக்கப்படுகின்றன. தி.மு.க. ஆட்சியில் பின்பற்றப்பட்ட டெண்டர் விதிமுறைகளை விட பல மடங்கு கடுமையான விதிமுறைகளை பின்பற்றி அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் விடப்படுகிறது. ஆனால் இங்கு பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் அதில் முறைகேடு என்றார். நீங்கள் செய்தால் சரி. நாங்கள் செய்தால் தவறா. ஊழலுக்கு பெயர் போனது தி.மு.க.. இந்தியாவிலேயே ஊழல் குற்றச்சாட்டுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி எது என்றால் தி.மு.க. ஆட்சி தான். ஊழலை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன அருகதை, தகுதி இருக்கிறது?. அவருக்கு வாய் கொழுப்பு. நாங்கள் தேர்தலை கண்டு பயப்படவில்லை. கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினோம். அதில் 90 சதவீதம் பேர் அ.தி.மு.க. வினர் தான் வெற்றி பெற்றனர். தேர்தலை கண்டு தி.மு.க. தான் பயந்து கொள்கிறது. அதனால் தான் அவர்கள் கோர்ட்டில் தடையாணை வாங்கினார்கள்.

மு.கஸ்டாலின் உலக தலைவர் போல பேசுகிறார். அவருடைய சகாப்தம் இந்த தேர்தலோடு முடிந்து விடும். மு.க.ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் பேசுகிறார். 2 ஆண்டுகளாக பேச முடியாமல் இருந்த கருணாநிதியை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருந்தால் அவர் நன்றாக பேசியிருப்பார். ஆனால் மு.க.ஸ்டாலின் அதை செய்யவில்லை. ஏனென்றால் சிகிச்சை அளித்திருந்தால் கட்சி தலைவர் பதவியை கருணாநிதி கொடுக்க மாட்டார். அவர் தனக்கு தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதியை வீட்டிலேயே அடைத்து வைத்து அவர் பேச முடியாத நிலையை உருவாக்கினார் மு.க.ஸ்டாலின். அவருடைய தந்தையே மு.க.ஸ்டாலினை நம்பவில்லை. நம்மையை இப்படி செய்கிறாரே. கட்சியை என்ன செய்வார் என்று நினைத்து கருணாநிதி கடைசி வரை கட்சியை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கவில்லை. இதில் தில்லு முல்லு இருக்கிறது. அதனால் தான் கடைசி வரை செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தார். அவர் இறந்த பிறகு தான் தி.மு.க. தலைவராக முடிந்தது. ஆனால் நாங்கள் அப்படியில்லை. அடி மட்டத்தில் இருந்து உயர்வான இடத்துக்கு வந்துள்ளோம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேட்பாளர் மகேந்திரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story