நெல்லை, சங்கரன்கோவிலில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்


நெல்லை, சங்கரன்கோவிலில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்
x
தினத்தந்தி 7 April 2019 10:57 PM GMT (Updated: 2019-04-08T04:27:13+05:30)

நெல்லை, சங்கரன்கோவிலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

தென்காசி,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் இன்று (திங்கட்கிழமை) குமரி மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நெல்லைக்கு வருகிறார். நெல்லையில் இரவு ஓய்வு எடுக்கும் அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) நெல்லை மற்றும் தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இதையொட்டி நெல்லை மற்றும் சங்கரன்கோவிலில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள பெல் மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாளை காலை 9 மணிக்கு பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்தை ஆதரித்து பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நெல்லையில் அவர் மதியம் ஓய்வு எடுக்கிறார். மாலையில் சங்கரன்கோவிலுக்கு புறப்பட்டு செல்கிறார்.

சங்கரன்கோவிலில் சுரண்டை ரோடு பால்பண்ணை எதிரே கலைஞர் திடலில் பிரசார பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாலையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தென்காசி தொகுதி பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார் கள். இந்த மேடை அமைக்கும் பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சங்கரன்கோவிலில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை அணி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் வருகிற 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை பல்வேறு பகுதியில் பிரசாரம் செய்கிறார். 10-ந்தேதி சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளிலும், 11-ந் தேதி வாசுதேவநல்லூர், 12-ந் தேதி மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதியிலும், சங்கரன்கோவில் நகர்பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். 13-ந்தேதி (சனிக்கிழமை) சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியம், 14-ந் தேதி குருவிகுளம் தெற்கு ஒன்றியம், 15-ந் தேதி (திங்கட்கிழமை) காலையில் கடையநல்லூரிலும், மாலையில் புளியங்குடி நகரிலும் பிரசாரம் செய்கிறார். 16-ந்தேதி காலை செங்கோட்டை நகர் பகுதியிலும், மாலையில் தென்காசி நகர் பகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார். வேட்பாளர் பிரசார நிகழ்ச்சிகளிலும் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story