மு.க.ஸ்டாலின் மக்களை குழப்புகிறார் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை நிறைவேற்றவே முடியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு


மு.க.ஸ்டாலின் மக்களை குழப்புகிறார் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை நிறைவேற்றவே முடியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 9 April 2019 4:30 AM IST (Updated: 9 April 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் மக்களை குழப்புகிறார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை நிறைவேற்றவே முடியாது என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஈரோடு,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து சத்தியமங்கலத்திலும், திருப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து கோபி, அந்தியூர், பவானி பகுதிகளிலும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா தெய்வங்களை வணங்கி இந்த தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறேன். நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்று தேர்ந்து எடுக்கும் தேர்தல். நம் நாட்டுக்கு வலிமையான பிரதமராக தற்போதைய பிரதமர் மோடியை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. தலைமையிலான வலிமையான கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. மத்தியில் திறமையான பிரதமரை தேர்ந்து எடுக்க உள்ளோம். அதற்காக நாம் சேர்ந்திருக்கும் கூட்டணியானது மக்களுக்காக உழைக்கும் தியாகத்தை செய்யும் கட்சிகளை கொண்ட கூட்டணி. இந்த கூட்டணி வெற்றி பெற நீங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். நமது சின்னம் இரட்டை இலை.

தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டணி அமைந்து உள்ளது. அந்த கூட்டணி மக்களுக்காக சேவை செய்யும் கூட்டணி அல்ல. தங்கள் குடும்பத்துக்கான கூட்டணி. நமது கூட்டணி தமிழ்நாடு புதுச்சேரியில் 40–க்கு 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெல்லும். நடைபெற உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 33 தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்து விட்டேன். இவ்வளவு குறுகிய காலத்தில் 33 தொகுதிகளுக்கு சுற்றி வருவது என்பது சாதாரண காரியம் அல்ல. இப்படி செல்லும்போது அ.தி.மு.க. அரசு செய்த திட்டங்களை மக்களிடம் கூறி வாக்குகள் கேட்கிறோம். ஒருவிவசாய குடும்பத்தை சேர்ந்த விவசாயி நான். எனவே விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து திட்டங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

விவசாயிகளுக்கு வேளாண்மை செய்ய தேவை நீர் ஆதாரம். அத்தகைய நீர் மேலாண்மைக்காக முக்கியத்துவம் அளித்து குடிமக்கள் மராமத்து பணி மூலம் ஏரி குளங்களை தூர்வாரி இருக்கிறோம். இதன் மூலம் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகிவிடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் 3 ஆயிரம் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. மேலும் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். மழைக்காலத்தில் பெய்யும் மழை நீரை சேமிக்கும் வகையில் எங்கெல்லாம் தண்ணீரை சேமிக்க முடியும் என்று 4 ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஓடைகள், ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டு நீரை சேமித்து கோடையில் பயன்படுத்தும் வகையில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

ஆனால் தி.மு.க. நாட்டு மக்களுக்கு செய்தது என்ன?. மத்திய அரசில் 15 ஆண்டுகள் பங்கெடுக்கும் வாய்ப்பு தி.மு.க.வுக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் தமிழகத்துக்கு ஏதேனும் திட்டங்களை தி.மு.க. கொண்டு வந்ததா? ஏதேனும் நிதி ஒதுக்கப்பட்டதா?. பெரிய வளர்ச்சித்திட்டங்கள் கொண்டு வரப்பட்டனவா?. அவர்கள் தங்கள் குடும்பத்தை வளமாக்கிக்கொண்டார்கள். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட, அதாவது 2ஜி அலைக்கற்றையில் ஊழல் செய்த ஆ.ராசா இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். நுணுக்கமான, விஞ்ஞானப்பூர்வமான ஊழல்களை செய்வதில் தி.மு.க.வை மிஞ்ச முடியாது. அந்த கட்சியின் தலைவர் அ.தி.மு.க. ஊழல் கட்சி என்று விமர்சிக்கிறார். அப்படி கூறும் அவர், எங்கே ஊழல் நடந்தது என்று குறிப்பிட்டு கூற முடியுமா?. ஊழல் செய்ததற்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது தி.மு.க. ஆட்சிதான். அந்த பெருமை தி.மு.க.வுக்கே உண்டு. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே தி.மு.க.வினர் அராஜகம் செய்து வருகிறார்கள்.

ஆனால் அ.தி.மு.க. 2011–ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது தமிழகத்தில் ஆட்சி செய்த தி.மு.க.வால் மின்வெட்டு அதிகமாக இருந்தது. அப்போது மின்வெட்டு இல்லாத தமிழகத்தை மாற்றுவேன். 3 ஆண்டுகளில் மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 3 ஆண்டுகளில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியது. அம்மா சொன்னதை செய்தார். அவருக்கு பின் அவரது வழியில் செயல்படும் அரசு, நிர்வாக திறமையால் அதிக மின் உற்பத்தியை பெருக்கி சாதனை படைத்து இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் மின்சார தேவை 9 ஆயிரத்து 500 மெகா வாட். அதைக்கூட தி.மு.க.வால் தர முடியவில்லை. ஆனால் தற்போது தமிழகத்தின் மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட். அப்போதைய தேவையை விட 6 ஆயிரத்து 500 மெகாவாட் அதிகமாக உற்பத்தி செய்து தடையில்லாத மின்சாரத்தை பொதுமக்கள், விவசாயிகள், தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறோம். இதனால் தமிழகத்தில் தொழிலும், உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக முன்னிலையில் உள்ளது தமிழகம் தான். மின்சாரத்துறையில் அதிக உற்பத்திக்காக விருது, வேளாண்மை துறையில் அதிக உற்பத்திக்காக விருது, மக்கள் நல்வாழ்வுத்துறையில் சிறந்த உடல் உறுப்பு அறுவை சிகிச்சைக்காக விருது எனறு அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு மத்திய அரசின் விருதுகளை பெற்று இருக்கிறோம்.

எந்த சமுதாயம் கல்வி அறிவு பெறுகிறதோ, அந்த சமுதாயம் வளர்ச்சி அடையும் என்று, அம்மா இருக்கும்போதே கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கினார். உங்கள் மாவட்டத்தை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன் அமைச்சராக இருக்கும் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ஆரம்ப பள்ளிக்கூடங்கள் ஏராளமாக தொடங்கப்பட்டு உள்ளன. நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. புதிய கலைக்கல்லூரி, மருத்துவ கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதனால் கற்போரின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் 99.6 சதவீதம் பேர் கற்போர்களாக உள்ளனர்.

இந்திய அளவில் உயர்கல்வி செல்வோர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 46.8 சதவீதமாக உள்ளது. பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு காலணி, சைக்கிள், புத்தகங்கள், மடிக்கணினி என்று அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் மாணவ–மாணவிகள் ஆர்வமாக படிக்கிறார்கள். மாணவ–மாணவிகள் மடிக்கணினி மூலம் உலகத்தில் உள்ள அனைத்து வி‌ஷயங்களையும் தெரிந்து வைத்துக்கொள்கிறார்கள். அ.தி.மு.க. அரசு செய்து உள்ள அனைத்தும் அவர்களுக்கு தெரியும். எனவே தி.மு.க. பொய் சொல்லி இனி ஓட்டு பெற முடியாது.

2 கைகளையும் இழந்த வாலிபர் என்னை வந்து பார்த்தார். அவரது கைகளை சரி செய்ய முடியுமா? என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கேட்டேன். அவர் மருத்துவ குழுவினரின் ஆலோசனையை கேட்கலாம் என்றார். நன்றாக கவனித்து செய்யுங்கள், ஏதேனும் சிக்கல் வந்தால் இதை வைத்தே தி.மு.க. கட்சியை நடத்திவிடும் என்று எச்சரித்தேன். ஆனால் நமது ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், இறந்து போன ஒருவரின் கையை எடுத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் அந்த வாலிபருக்கு பொருத்தி சாதனை படைத்தனர். தற்போது அவர் எல்லா வேலைகளையும் செய்கிறார். திருமணமும் செய்து கொண்டார். இப்படி மக்கள் நல்வாழ்வுத்துறை சாதனை படைத்து உள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏழை மக்கள் சிகிச்சைகள் பெற காப்பீட்டு திட்டத்தில் ரூ.2 லட்சம் பெறலாம் என்பதை ரூ5 லட்சமாக உயர்த்தி இருக்கிறோம். மக்களுக்கு என்ன தேவை என்பதை வகுத்து தொகுத்து நாங்கள் வழங்கி வருகிறோம். அம்மாவின் வழியில் சிறந்த நிர்வாகத்தை எங்கள் அரசு வழங்கி வருகிறது.

தைப்பொங்கலுக்கு ரே‌ஷன் அட்டை தாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கினோம். அடுத்து விவசாய கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் தருவேன் என்று அறிவித்தேன். இந்த நேரத்தில் அனைவருக்கும் கொடுத்து முடித்து இருப்பேன். ஆனால், தேர்தலை காரணம் காட்டி கொடுக்கக்கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியதால், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் வழங்குவேன்.

சொட்டு நீர் பாசனத்துக்கு 100 சதவீதம் மானியம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கி வருகிறோம். படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினோம். அதில் ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு முதலீடு பெறப்பட்டு உள்ளது. அதில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. இதன் மூலம் 304 புதிய தொழிற்சாலைகள் வர உள்ளன. 5 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், 5 லட்சம் இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் என மொத்தம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

கடந்த தேர்தலில் அம்மா கூறிய தேர்தல் அறிக்கையை அவருக்கு பின், அவரது வழியில் நடக்கும் அரசு முழுமையாக நிறைவேற்றி வருகிறது. இந்த சாதனைகளை நாங்கள் உங்களிடம் கூறி வாக்குகள் கேட்கிறோம். ஆனால் தி.மு.க. ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. நடப்பது சட்டமன்ற தேர்தல் அல்ல, நாடாளுமன்ற தேர்தல். ஆனால் ஏதோ சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குறுதிகள் கொடுப்பதுபோல மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறி உள்ள எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. ஆனால் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்புகிறார். அதன் மூலம் ஓட்டுகள் பெற்று விட முடியும் என்று நினைக்கிறார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்டுகிறார் மு.க.ஸ்டாலின். அவரது தந்தை கருணாநிதி முதல்–அமைச்சராகவும், மு.க.ஸ்டாலின் துணை முதல்–அமைச்சராகவும் இருந்த போது அவரால் மதுரைக்கு சென்று கால் வைக்க முடிந்ததா? அச்சப்பட்டு மதுரைக்கு கூட செல்லாத ஸ்டாலின், இந்த தேர்தல் பிரசாரத்துக்காக மதுரை சென்று அங்கு காலையில் நடைபயிற்சி சென்று இருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்படுகிறது என்பதற்கு அதுவே சான்று. அந்த சான்றினை மு.க.ஸ்டாலினே வழங்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து 15 ஆயிரம் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையம் எது என்று மத்திய அரசு ஒரு ஆய்வு மற்றும் போட்டி நடத்தியது. அதில் முதல் இடத்தை கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையம் பிடித்து இருக்கிறது. 5–வது இடத்தை அண்ணாநகர் போலீஸ் நிலையம் பிடித்து இருக்கிறது என்பதே, சட்டம்–ஒழுங்கு தமிழகத்தில் சிறப்பாக இருக்கிறது என்பதையும், இந்தியாவிலேயே தமிழகம்தான் சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது என்ற சிறப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் விவசாயி. எனவே விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறேன். தண்ணீர் தட்டுப்பாடு வரக்கூடாது என்பதற்காக கோதாவரி–காவிரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். ரூ.6 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றியே தீருவோம். இதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை தீரும். அனைத்து ஏரி, குளங்களுக்கும் தண்ணீர் நிரப்பப்படும். விவசாயிகளின் சார்பு தொழிலான கால்நடைகள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து, ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு கலப்பின மாடுகள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். சமீபத்தில் ஏராளமான மாடுகள் நோய்கள் தாக்கி உயிரிழந்ததாக தெரிவித்தனர். கலப்பின மாடுகள் வழங்கப்படும்போது அவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும். இதுபோல் சென்னைக்கு அருகில் மிகப்பெரிய உணவுப்பூங்கா அமைக்கப்படுகிறது. இங்கு ஆன்–லைன் மூலம் விவசாயிகள் தங்கள் காய்–கனிகளை விற்பனை செய்ய முடியும். கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை என்றால் ஒரு மாதம் வரை இலவசமாக அங்குள்ள குளிர்சாதன கிடங்கில் விளைபொருட்களை பாதுகாப்பாக வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்து கொள்ளலாம்.

நான் ஒரு விவசாயி என்பதை விட, இங்குள்ள அனைத்து விவசாயிகளையும் நான் முதல்–அமைச்சராகவே பார்க்கிறேன். காரணம், அ.தி.மு.க.வில் மட்டும்தான் சாதாரண தொண்டனும், விவசாயியும் உயர் பதவிக்கு வர முடியும்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். தி.மு.க.வினர் சரியாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு நன்றாக இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் ஒருவர் அழகு நிலைய பெண்ணை தாக்கினார். 2 வாரங்களுக்கு முன்பு தி.மு.க. மாவட்டக்குழு உறுப்பினர் ஒருவர் ரெயிலில் கர்ப்பிணியை பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தார்.

அதுமட்டுமா, பிரியாணி, புரோட்டா கடைகளுக்கு சாப்பிட செல்கிறார்கள். அது தவறு இல்லை. ஆனால் சாப்பிட்டு விட்டு காசு கேட்டால் மூக்கிலேயே குத்துகிறார்கள். இவர்கள் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுவதா?.

மு.க.ஸ்டாலின் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. எனவே விரக்தியிலும், ஏமாற்றத்திலும் பேசுகிறார்.

அம்மா இறந்ததும், கட்சியை உடைத்து விடலாம் என்று நினைத்தார். பின்னர் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால், இறைவனின் ஆசியால் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆசியால் ஆட்சி நடத்துகிறேன். மக்களுக்காக ஒவ்வொன்றையும் திட்டமிட்டு நிர்வாகம் செய்கிறேன்.

இந்த தேர்தல் முடிந்ததும் தனியார் சேனல் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க.வின் சேனல்களுக்குத்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மக்களுக்கு நல்ல ஆட்சி கிடைக்கவும், மத்தியில் பிரதமர் மோடியின் ஆட்சி தொடரவும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story