ஈரோட்டை சேர்ந்த பெண்ணிடம் பொய்சொல்லி குழந்தையை ஒப்படைத்த தாய் தலைமறைவு
ஈரோட்டை சேர்ந்த பெண்ணிடம் பொய்சொல்லி குழந்தையை ஒப்படைத்துவிட்டு தாய் தலைமறைவானார்.
ஈரோடு,
ஈரோட்டை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 65). இவர் கடந்த மாதம் 19–ந் தேதி கண் அறுவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். அப்போது பக்கத்து படுக்கையில் இருந்த வேணி என்பவர், மகேஸ்வரி மற்றும் அவருடைய மகளுடன் பழகி வந்தார்.
சம்பவத்தன்று வேணி, தனது அப்பாவின் கண் அறுவை சிகிச்சைக்காக தஞ்சாவூர் செல்வதாகவும், அதுவரை தனது மகன் பிரகதீசை (5) பார்த்து கொள்ளுமாறும் மகேஸ்வரியின் மகளிடம் கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து அவர் தனக்கு தெரிந்த ஈரோடு மணல்மேட்டை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி சாலேத் (22) என்பவரை அறிமுகம் செய்து வைத்து, குழந்தையை இவர் பார்த்துக்கொள்வார் என்று வேணியிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் வேணி தனது மகனை சாலேத்திடம் ஒப்படைத்துவிட்டு, நாளை வந்து குழந்தையை வாங்கிச்செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் ஒருவாரம் ஆகியும் வேணி தனது குழந்தையை வாங்க வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சாலேத் இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குழந்தையை விட்டு சென்ற வேணிக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததும், அவரால் குழந்தையை வளர்க்க முடியாததால் சாலேத்திடம் விட்டுச்சென்றதும் தெரியவந்தது. தற்போது போலீசார் வேணியை வலைவீசி தேடி வருகிறார்கள்.