‘பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு தந்தது தி.மு.க.தான்’ ஸ்டாலின் பேச்சு


‘பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு தந்தது தி.மு.க.தான்’ ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 9 April 2019 4:45 AM IST (Updated: 9 April 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு தந்தது தி.மு.க. ஆட்சிதான் என்று நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் எச்.வசந்தகுமாருக்கு ஆதரவு திரட்டும் பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும் நாங்கள் மக்களோடு இருக்கக்கூடியவர்கள் என்ற உரிமையோடு ஓட்டு கேட்க வந்திருக்கிறோம். ஆகவே நீங்கள் மிகப்பெரிய வெற்றியை தேடித்தருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கக் கூடியவர்களுக்கும் இருக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்த மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் நமது அணிதான் வெற்றி பெற்றிருக்கிறது. அதுவே சாட்சியாக நமது வெற்றிக்கு அடையாளமாக எடுத்துக்காட்டுக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் அது மிகையாகாது.

திருவள்ளுவருக்கு 133 அடியில் உலகமே வியந்து பார்க்கும் வகையில் நம்முடைய தமிழ் சிற்பி மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை வைத்த கன்னியாகுமரிக்கு நான் வந்திருக்கிறேன். அந்த வள்ளுவருக்கு உங்கள் சார்பில் இந்த மேடையில் இருந்து நான் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

தலைவர் கருணாநிதி நம்மோடு இருந்திருந்தால் இந்நேரம் அவர் இந்த மேடைக்கு வந்திருப்பார். உங்களிடத்தில் ஆதரவு கேட்டிருப்பார். வசந்தகுமாரை வெற்றிபெற வையுங்கள், கை சின்னத்தில் ஆதரவு தாருங்கள் என்று உங்களிடம் கேட்டிருப்பார். மேடையில் அனைவரின் பெயரையும் கூறிவிட்டு, நிறைவாக இங்கு குழுமியிருக்கிற உங்களை எல்லாம் பார்த்து கரகரத்த குரலில், காந்த குரலில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே என அழைத்திருப்பார். காஞ்சி தந்த வள்ளுவன், அண்ணாவுக்கு அருகில் இன்று அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பதிலாக, அவருடைய மகனாக ஸ்டாலின் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். கருணாநிதிக்கு பதிலாக என்று நான் சொல்லக்கூடாது. அவருக்குப்பதிலாக யாரும் வரமுடியாது. இருந்தாலும் அவரது வார்ப்பாக, அவரால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்டாலினாக உங்களிடத்தில் வாக்கு கேட்க நான் வந்திருக்கிறேன்.

இன்றைக்கு நாம் வாக்கு கேட்கிறோம். ஏற்கனவெ ஆட்சி, அதிகாரம் என்ற பொறுப்பில் இருந்தபோது தி.மு.க.வாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு என்னென்ன பணிகளை, காரியங்களை நிறைவேற்றியுள்ளோம். மீண்டும் பொறுப்புக்கு வந்தால் என்னென்ன செய்யப்போகிறோம்? என்னென்ன திட்டங்களை செய்யப்போகிறோம் என்று எடுத்துச் சொல்கிறோம்.

அதே நேரத்தில் மத்திய, மாநில ஆட்சிகளில் இருப்பவர்கள் ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டை எப்படி எல்லாம் குட்டிச்சுவராக்கிக்கொண்டிருக்கிறார்கள். எந்த அளவுக்கு லஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. ஊழல் இன்று மலிந்துபோய் உள்ளது. எங்கு பார்த்தாலும் கரெப்சன், கலெக்சன், கமிஷன் என்ற நிலையில் இந்த இரு ஆட்சிகளும் இருந்து கொண்டிருக்கிறது. இதை ஆதாரங்களோடு, ஏதோ வாய்க்கு வந்தபடியல்ல, புள்ளிவிவரத்தோடு இந்த தேர்தல் பிரசாரத்தில் எடுத்துச் சொல்கிறோம்.

ஆனால் அதே நேரத்தில் நம்மை எதிர்க்கிற கட்சிகள், வேட்பாளர்கள், எதிர்க்கிற அமைப்புகள் எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என்று சொன்னால் மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி ஐந்து ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிற ஆட்சி. மாநிலத்தில் இருக்கிற ஆட்சி எட்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிற ஆட்சி. அவர்கள் தங்களது ஆட்சிகளில் என்ன செய்தோம் என்பதை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். ஆனால் அவர்களால் சாதனைகளை எடுத்துச்சொல்ல முடியவில்லை.

காரணம், சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். ஆக எதுவும் இல்லை. அதற்கு நேர்மாறாக நம்மை விமர்சிக்கின்ற, தாக்கிப்பேசுகிற, தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேசுகிற நிலையில்தான், மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆட்சியில் இருப்பதைப்போல நம்மைப்பார்த்து விமர்சனம் செய்கிறார்கள். அதுதான் விந்தையிலும் விந்தையாக, வேடிக்கையாக இருக்கிறது.

தி.மு.க. மத்தியில் அங்கம் வகித்த நேரத்தில் எதாவது செய்தார்களா என கேட்கிறார்கள். நீங்களும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் சிலவற்றை அடையாளம் காட்ட விரும்புகிறேன். குறிப்பாக மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, அவரது ஆட்சி காலத்தில் அங்கம் வகித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போராடினார்.

அதன்பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயர், உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து, சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், 90 ரெயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், சேதுசமுத்திர திட்டம். சென்னை அருகே ஓரகடத்தில் தேசிய ஆட்டோ மொபைல். விவசாயிகள் நலனை மனதில் கொண்டு ஒட்டுமொத்த விவசாயிகளின் ரூ.72 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மத்திய அரசின் உயர்கல்வியில் நிலுவையில் இருக்கும் நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. பாமரர்கள் கையில் செல்போன் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆ.ராசா மத்தியில் அமைச்சராக இருந்தது தான்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story