திருவாரூர் தியாகராஜர் கோவில் பாதுகாப்பு மையத்தில் 7-ம் கட்டமாக சிலைகள் ஆய்வு பணி தொடக்கம்


திருவாரூர் தியாகராஜர் கோவில் பாதுகாப்பு மையத்தில் 7-ம் கட்டமாக சிலைகள் ஆய்வு பணி தொடக்கம்
x
தினத்தந்தி 9 April 2019 4:30 AM IST (Updated: 9 April 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 7-ம் கட்டமாக சிலைகள் ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவிலிலுள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 4,539 சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினர் உதவியுடன் 6 கட்ட ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு கடந்த மாதம் 21-ந் தேதி முடிவுற்றது. இந்த நிலையில் நேற்று 7-ம் கட்டமாக ஆய்வு செய்யும் பணியை தொடங்கினர்.

இந்த ஆய்வில் சிலைகளின் தொன்மை தன்மை மற்றும் அளவீடுகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3,840 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது தென் மண்டல தொல்லியல்துறை இயக்குனர் நம்பிராஜன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் தலைமையில் 40 தொல்லியல் துறையினர் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் வைத்தீஸ்வரன் கோவில், திருப்புங்கூர், குத்தாலம், அம்மாசத்திரம், திருமணஞ்சேரி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த கோவில்களின் ஐம்பொன் சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை நடந்த ஆய்வில் 5 சிலைகள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே வேறு ஏதாவது சிலைகள் போலியாக இருக்கிறதா? என்பது குறித்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு வருகிற 12-ந் தேதி வரை நடைபெறும் என தெரிகிறது.

Next Story