வியாபாரிகள் சம்பாதிப்பதற்காக நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்க வேண்டாம் கமல்ஹாசன் பேச்சு
வியாபாரிகள் சம்பாதிப்பதற்காக நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்க வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
திருப்பூர்,
மக்கள் நீதி மய்யத்தின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மூகாம்பிகா ஆகியோருக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்கு சேகரிக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பல்லடம், உடுமலை பகுதியில் பிரசாரம் செய்தார். பல்லடம் என்.ஜி.ஆர்.ரோடு, உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு திறந்த வேனில் நின்று பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:–
இந்தியாவில் தமிழகத்தின் நிலை என்ன? என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் இது. யார் பிரதமராக வந்தாலும், நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இங்கிருந்து பிச்சை பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஏதாவது போடுங்கள் என்று கெஞ்சும் நிலையில் நாம் இருக்கக்கூடாது. அழுத்தமாக, தைரியமாக தமிழகத்துக்கு குரல் கொடுக்க வேண்டும்.
அரசியலை வியாபாரமாக நினைக்காத நல்லவர்கள் நாடாளுமன்றத்துக்கு போக வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். அஸ்திவாரத்தை நாம் பலமாக போட்டுக்கொண்டால் அடுத்த எனது இலக்கு, உங்களுடைய இலக்கு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதை நாம் செய்து காட்ட வேண்டும். 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ள இந்த தொகுதியில் முதலாளிகளும், தொழிலாளிகளும் சண்டையிட்டுக்கொள்ளும் நிலைக்கு காரணம் ஜி.எஸ்.டி. தான்.
இதையெல்லாம் மாற்றுவதற்கு கவுன்சிலில் சென்று முறையிட முடியும். ஆனால் அங்கு சென்று பலர் குரல் கொடுத்தால் முறைப்படுத்த முடியும். அதற்கு இங்கிருந்து எம்.பி.க்கள் கூட்டம் செல்ல வேண்டும். உங்கள் முகத்தை பார்க்கும்போது எங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. ஒன்று, இரண்டு பேர் மட்டுமல்ல. அதிகமாகவே வெற்றி பெற போகிறோம்.
அனைத்து தொகுதிகளிலும் டார்ச்லைட் சின்னத்தில் வேட்பாளர்கள் நிற்கிறார்கள். புதுச்சேரி தொகுதிக்கு உட்பட்ட மாகி என்ற இடத்தில், இங்கு சேராத கம்யூனிஸ்டு அங்கு மக்கள் நீதி மய்யத்தோடு சேர்ந்துள்ளனர். இதெல்லாம் மிருதுவான அதிர்வு தான் என்றாலும் பெரிய பூகம்பமாக மாறும். 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இருக்கின்ற வழியை அகலப்படுத்த வேண்டுமே தவிர, வியாபாரிகள் சம்பாதிப்பதற்காக நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்க வேண்டாம். எங்களுக்கு போக்குவரத்து வசதிக்காக சாலை வேண்டும். ஏற்கனவே பாதை இருக்கிறது. அந்த பாதையை விரிவுபடுத்துங்கள். புதிதாக லாபம் பார்க்க வேண்டாம். மக்கள் வியர்வையில் லாபம் பார்க்க வேண்டாம். அதற்கான அஸ்திவாரத்தை நீதிமன்றம் நமக்கு போட்டு கொடுத்திருக்கிறது.
விவசாயம் நடந்து வரும் இடத்தை ஆக்கிரமித்து, காண்டிராக்டர்களுக்கு காசு கொடுப்பதற்கு நீங்கள் ஒத்துக்கொண்ட திட்டத்துக்காக எங்களை பழிவாங்காதீர்கள். இதை எடுத்துச்சொல்ல ஒரு குரல் வேண்டும். டாக்டர் மகேந்திரன் உங்கள் குரலாக இருப்பார். பரம்பிக்குளம்–ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து பல்லடத்துக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று அழுத்தமான குரல் டெல்லியில் கேட்கும். இருக்கின்ற 2 கழகங்களை சேர்ந்த மந்திரிகள், மந்திரி இல்லாதவர்களை திட்டிக்கொண்டு இருப்பதில் பிரயோஜனம் இல்லை.
உடுமலை பகுதிக்கு பலமுறை வந்தாலும், இப்போது நமது வேலைக்காக வந்துள்ளேன். நமது திட்டத்தை செயலாற்ற வேண்டியது உங்கள் கடமை. அதன்பிறகு இங்கு செயல்படுத்தாமல் உள்ள திட்டங்களை செயல்படுத்த வேண்டியது எங்கள் கடமை. டெல்லியில் உங்கள் குரலாக இருப்பார் என்ற நம்பிக்கையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மூகாம்பிகாவை உங்கள் முன் நிறுத்தியுள்ளோம். இந்த தேர்தலில் நிற்பவர்கள் எல்லாம் நாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். மாற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது தமிழ்நாடு. அந்த தேரை இழுத்து தள்ளி போக வேண்டிய பாதையில் செலுத்த வேண்டியது உங்கள் கடமை.
தேர்தல் நேரத்தில் மட்டும் எங்களின் வேட்பாளர்கள் வரமாட்டார்கள். உங்களை தேடித்தேடி வந்து கொண்டே இருப்பார்கள். சரியான நேரத்தில், சரியான தருணத்தில் மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலுக்கு வந்துள்ளது. உங்களுக்கு வேண்டிய மாற்றத்தை கொடுக்கும். இது மக்கள் ஆட்சி. நம்ம ஆட்சி. அதற்கு வழி செய்யுங்கள். மக்கள் விரோதிகள் யார் என்று நீங்கள் அடையாளம் கண்டு கொண்டீர்கள். இப்போது பாதை எது என்பதைத்தான் நீங்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு வேலை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் யாரும் தலைவர்கள் இல்லை. நீங்கள் தான் தலைவர்கள். நீங்கள் தூக்கி வைத்த உயரம் தான் இது. நீங்கள் தூக்கி வைத்ததால் தான், நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். அதை நீங்கள் ஒவ்வொரு முறையும் மறப்பதால் தான் அவர்கள் உங்கள் தலையில் கை வைக்கிறார்கள்.
ஒரு முன்னாள் அமைச்சர் சொல்லியிருக்கிறார். கடைசியில் வாக்குப்பதிவின்போது பூத் என்று வந்தால் நாம் தானே இருப்போம். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். புரியுதா? என்றும் கேட்டுள்ளார். அவர்கள் ஆட்களுக்கு புரிந்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை. உங்களுக்கு புரிந்திருக்கும். பூத்தில் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். டார்ச்லைட் ஒளியை யாராவது மறைக்க முயன்றால் நம் களவீரர்களின் வீரம் அப்போது தெரியும். அரிவாள் வீசும் வீரம் நம்முடையது அல்ல. சட்டத்தை வீசும். 8 வழிச்சாலை திட்டத்தில் நம் மீது ஏறி நின்று ஒதுங்குமாறு கூறினார்கள். இப்போது அவர்களை ஒதுங்க வைத்துள்ளது நீதி. அதுதொடர்ந்து நடக்கும். நமது விவசாயிகளையும், தறி நூற்பவர்களையும் பாதுகாக்க வேண்டியது கடமை. ஜி.எஸ்.டி.யை ஒருவழி பண்ண வேண்டும். யார் பிரதமராக இருந்தாலும் மக்களின் கோரிக்கைகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்லடத்தில் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருந்தபோது, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர் ஒருவர், வாக்குப்பதிவு அன்று பூத்தில் இருக்கும் மக்கள் நீதி மய்ய கட்சியினரை, முக்கிய கட்சியை சேர்ந்தவர்கள் விலைக்கு வாங்க பார்க்கிறார்கள். எங்களிடம் பேசி வருகிறார்கள். நாங்கள் விலை போக மாட்டோம் என்று கூறினார். அதற்கு கமல்ஹாசன், நீங்கள் விலைபோக மாட்டீர்கள். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. இது உங்களுடைய கடமை. சிறப்பாக செயலாற்றுங்கள் என்று பாராட்டினார்.