வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னத்துடன் கூடிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி


வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னத்துடன் கூடிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி
x
தினத்தந்தி 9 April 2019 4:30 AM IST (Updated: 9 April 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாட்டில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னத்துடன் கூடிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடைபெற்றது.

தஞ்சாவூர்,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இவற்றுடன் தமிழகத்தில் உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன.இவற்றில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 3 தொகுதிகள் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டவை. தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிகுட்பட்டவையாகும்.

தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் 2,287 வாக்குச்சாவடிகளில் 11,662 அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 289 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக 694 அலுவலர்கள் 5 மற்றும் 6-ம் நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பணியாற்ற உள்ளனர்.

வாக்குப்பதிவு உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லவும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் பணி தொடர்பாக தேவையான உதவிகளை செய்யவும் 195 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 5,722 வாக்குப்பதிவு எந்திரங்களும், 3,662 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 4005 வி.வி.பேட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்லாம் அந்தந்த தொகுதிகுட்பட்ட தாலுகாக்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம், புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு பொருத்தும்பணி தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை வருவாய்த்துறை அலுவலர்கள் எடுத்து வந்தனர். பின்னர் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு அதில் வாக்குச்சீட்டு பொருத்தப்பட்டது. இதையடுத்து அந்த எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டியில் வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு அறை சீல் வைக்கப் பட்டது.

இந்த பணியை சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் பார்வையிட்டார். அவர் கூறும்போது, திருவையாறு, ஒரத்தநாடு தாலுகா அலுவலகத்திலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம், புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடைபெற்றது. நாளை(இன்று) பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி தாலுகா அலுவலகங்களில் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடைபெறும் என்றார்.

Next Story