ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறை சென்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்துவிட்டு ஊழல் குற்றச்சாட்டு சுமத்த ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கு
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறை சென்ற ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு மீண்டும் தேர்தலில் போட்டி யிட வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின், அ.தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த என்ன தகுதி இருக்கிறது? என்று ஊட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கி பேசினார்.
ஊட்டி,
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் எம்.தியாகராஜனை ஆதரித்து குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குன்னூரில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:–
நீலகிரி மாவட்டம் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மிகவும் விருப்பத்துக்குரிய பகுதியாகும். நீலகிரி மாவட்ட மக்களை மிகவும் அவர் நேசித்து வந்தார். இந்த மாவட்ட மக்களுக்கு ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படுத் தப்படும். நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு தேயிலை தொழிலாளர்கள் உள்ளதால் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும். குன்னூர் பஸ் நிலையம் விரிவுபடுத்தப்படும். குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதி வாடகை பிரச்சினையை தீர்க்க பரிசீலனை செய்யப்படும்.
கோடநாடு விவகாரத்தில் எனக்கு தொடர்பு உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சைப்பொய். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷயான் மற்றும் மனோஜ் இருவரும் ஒரு ஓட்டலில் பேசிக்கொண்டிருக் கின்றனர், ஸ்டாலின் சொல்லிக் கொடுத்ததை எப்படி நிறைவேற்றலாம் என்பதையும் முதல்–அமைச்சரை எப்படி இதில் இணைக்கலாம் என்றும் பேசிய வீடியோ ஊடகங்களில் வெளியானது.
முதல்–அமைச்சர் மீதே பொய்யான வழக்கை ஜோடிக்க பார்க்கிறார் என்றால் நாளை நாட்டு மக்கள் மீது எப்படி பொய் வழக்குகள் போடுவார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஷயான், மனோஜ் ஆகிய இருவர் மீதும் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் வழக்குகள் உள்ளன. கோடநாடு வழக்கில் குற்றம் செய்தவர்களை தி.மு.க.வினர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் ஜாமீன் எடுக்கிறார்கள் என்றால் மு.க.ஸ்டாலினை கூலிப்படை தலைவன் என்றுதான் சொல்ல வேண்டும். பாலியல் குற்றவாளிகளை ஜாமீன் எடுக்கும்போது, பாலியல் குற்றம் குறித்து மு.க.ஸ்டாலின் பேச தகுதி இல்லை.
கருணாநிதி முன்னாள் முதல்–அமைச்சர், எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவருக்கு பேச முடியாத நிலை ஏற்பட்டது. ஏன் பேச முடியவில்லை? அவர் தலைவராக இருந்தால் மு.க.ஸ்டாலின், தான் தலைவராக முடியாது என்று எண்ணி அவருக்கு சிகிச்சை அளிக்காமல் 2 வருடம் வீட்டிலேயே வைத்திருந்தார். வெளிநாட்டில் உயர்தர சிகிச்சை அளித்திருந்தால் அவர் நன்றாக பேசியிருப்பார் என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். திட்டமிட்டு மு.க.ஸ்டாலின் தனது சுயநலத்திற்காக தன்னுடைய தந்தையையே சிறை வைத்த தலைவர்.
மு.க.ஸ்டாலின் அவரை சிறை வைத்த போது தன்னை தி.மு.க. தலைவராக அறிவியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கருணாநிதி அறிவிக்கவில்லை, ஏன் என்றால், எனக்கே இப்படிப்பட்ட கொடுமை நடக்கிறது, என்னை நம்பியிருக்கிற தொண்டர்களின் நிலை என்னவாவது என்று நினைத்து செயல் தலைவராகத்தான் ஆக்கினார்.
அவர் இறந்த பிறகுதான் அவசர, அவசரமாக மு.க.ஸ்டாலின் தலைவர் ஆனார். இது அனைத்தையும் தி.மு.க. கட்சியினர் தான் கூறினார்கள். அவர் நன்றாக இருந்தால் தி.மு.க. தலைவராக முடியாது என்று சித்ரவதை செய்துள்ளார்கள். இது குறித்தும் இந்த அரசு விசாரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ஊட்டியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:–
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் இந்த பகுதியை சேர்ந்த தியாகராஜன் போட்டி யிடுகிறார். தி.மு.க. சார்பில் ஸ்பெக்ட்ரம் ஆ.ராசா போட்டியிடுகிறார். ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்டபோது எம்.பி.யாக இருந்த ஆ.ராசா இங்கு வரவில்லை. தமிழக அரசு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 450 வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசாவும், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழியும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் அவர்கள் சிறை யில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இப்போது சி.பி.ஐ. மேல்முறையீடு செய்ய உள்ளது. ஊழல் வழக்கில் சிறை சென்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அ.தி.மு.க அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் சுமத்துகிறார். ஊழல் வழக்கில் சிறை சென்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த என்ன தகுதி இருக்கிறது?. தி.மு.க.வினர் மத்தியிலும், மாநிலத்திலும் பதவியில் இருந்தபோது மக்களுக்கு நன்மை செய்யவில்லை. குடும்பத்தினர் வளம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டனர். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசுதான்.
தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 100–க்கு 27 என்ற சதவீதத்தில் இருந்தது. முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கல்விக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். 37 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு சிறப்பு திட்டங் களால் தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 100–க்கு 46.8 சதவீதமாக உயர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
2006–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டுவரை பதவி வகித்த தி.மு.க. ஆட்சியில் மின்தட்டுப்பாடு இருந்தது. இதனால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. அ.தி.மு.க. அரசின் தீவிர முயற்சியால் மின்சார உற்பத்தி அதிகரித்தது. தி.மு.க. ஆட்சியில் 9 ஆயிரம் மெகாவாட் மின்தேவை இருந்தபோது பற்றாக்குறை ஏற்பட்டது. இப்போது 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் மின்மிகை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
மக்கள் நல திட்டங்கள், உடல் உறுப்புதானம், சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால் தமிழக அரசுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. 2 கைகள் இல்லாத ஒருவர் தனக்கு கைகளை பொருத்த வேண்டும் என்று என்னிடம் மனுகொடுத்தார். அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு தானத்தின் மூலம் அவருக்கு 2 கைகள் பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இதுபோன்று ஏழை, எளிய மக்களுக்கு இந்த அரசு உதவி வருகிறது.
தொழில் வளர்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதன் மூலம் 304 தொழிற்சாலை கள் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் நேரடியாக 5½ லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேர் என மொத்தம் 10½ லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. நாங்கள் சாதனைகளை சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்கிறோம். ஆனால் மு.க.ஸ்டாலின் எந்த சாதனை செய்துள்ளார். குறைகளை மட்டுமே கூறியுள்ளார்.
ஊட்டியில் 3–வது குடிநீர் திட்டப்பணிகள் ரூ.27 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இது விரைவில் நிறைவுபெற உள்ளது. ரூ.20 கோடி செலவில் அனைத்து சாலைகளும் விரிவாக்கம் செய்யப் பட உள்ளது. ரூ.2 கோடி செலவில் ஊட்டி பஸ் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஊட்டி–கேத்தி நெடுஞ்சாலை சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு விரிவுபடுத்தப்பட இருக்கிறது. ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தொட்டபெட்டாவில் இருந்து படகு இல்லம் வரை ரோப்கார் வசதி செய்யப்படும். படுகர் இன மக்களை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைப்பாகையும், படுகர் இன மக்கள் அணியும் போர்வை யும் ஊட்டியில் அணிவிக்கப்பட்டது. பின்னர் கோத்தகிரி எம்ஜி.ஆர். சிலைக்கு அருகில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கோத்தகிரி உள்ளிட்ட நீலகிரி மாவட்டம் முழுவதும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். இந்த தொகுதி மக்களுக்காக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். நானும் அவரது வழியில் இந்த தொகுதி மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன். பசுந்தேயிலை விலை வீழ்ச்சி அடைந்த போது, ரூ.12 கோடி மானியம் வழங்கினோம். பொங்கல் பரிசாக ரூ.1000–ம் அனைவருக்கும் வழங்கினோம். தேர்தல் முடிந்த பின்னர் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:–
நாங்கள் அரசின் சாதனைகளை கூறி வாக்கு கேட்கிறோம். ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்த தி.மு.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எத்தனை ஆண்டுகாலம் இவர்கள் ஆட்சியில் இருந்தாலும் நாட்டு மக்களுக்கு எந்த பலனும் கிடையாது. காவிரி நதி நீர் பிரச்சி னைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் 23 நாட்கள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் குரல் கொடுத்தனர். நாடாளுமன்றம் முடங்கியது. வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் அரசாக அ.தி.மு.க. அரசு விளங்கி வருகிறது. காவிரி பிரச்சினைக்காக இவர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து இருப்பார்களா?.
இஸ்லாமிய மக்களுக்கு இந்த அரசு அரணாக இருந்து பாதுகாப்பு அளித்து வருகிறது. மாவட்ட காஜிகளுக்கு மாதம் மதிப்பூதியம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சிக்காக 498 மெட்ரிக் டன் அரிசி 3 ஆயிரம் மசூதிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசு நிதியை நிறுத்தியது. அ.தி.மு.க. அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கி இஸ்லாமிய மக்கள் ஹஜ் பயணம் செய்ய உதவுகிறது. கிறிஸ்தவர்கள் ஜெருசலேத்துக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதி வழங்கி வருகிறோம்.
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் 92 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் முடியும். மேட்டுப்பாளையத்தில் அரசு கல்லூரி கட்ட ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் பணி தொடங்கும். மேட்டுப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க புறவழிச்சாலை அமைக்க நிலம் எடுக்கும் பணிக்கு ரூ.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நரசிம்மநாயக்கன்பாளையம் முதல் கல்லாறு வரையுள்ள இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும்.
அத்திக்கடவு –அவினாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், அன்னூர், தொண்டாமுத்தூர் பகுதிகள் இணைக்கப்பட்டு அத்திக்கடவு 2–வது திட்டமாக செயல்படுத்தப்பட்டு நீர்நிலைகள் நிரப்பப்படும் என்ற மகிழ்ச்சியான தகவலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி விரிவுபடுத்தப்படும். மேட்டுப்பாளையத்துக்கு புதிய சாலை, வனப்பகுதியில் அமைக்க மத்திய அரசின் அனுமதி பெற்று செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.