திருக்கனூரில் பரபரப்பு: வாக்குச்சாவடிக்கு தீ வைப்பு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
புதுவை திருக்கனூரில் வாக்குச்சாவடிக்கு தீவைக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி,
புதுச்சேரி திருக்கனூர் பிள்ளையார்கோவில் வீதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்களின் வசதிக்காக கீற்று கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அந்த கொட்டகைக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் கீற்றுக்கொட்டகை மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
அங்கிருந்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் அருகில் இருந்த வைக்கோல் போருக்கும் தீ வைத்தனர். இதில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது. அப்போது அருகில் இருந்த மீன் கடையின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பலகையும் தீப்பிடித்து எரிந்தது. அதையும் தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்த உடன் திருக்கனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வாக்குச்சாவடிக்கு கீற்றுக்கொட்டகைக்கு தீ வைத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.