பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் அதிகாரி ஆய்வு


பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 9 April 2019 4:30 AM IST (Updated: 9 April 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீன்சுருட்டி, காடுவெட்டு, படநிலை, பெரிய கிருஷ்ணாபுரம் மற்றும் விளந்தை ஆகிய பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி கூறுகையில், சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தலையொட்டி, அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 297 வாக்குச்சாவடி மையங்களில் 52 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவைகள் எனவும், 1 வாக்குச்சாவடி நெருக்கடியானவை எனவும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 290 வாக்குச்சாவடி மையங்களில் 35 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவைகள் எனவும், 2 வாக்குச்சாவடி மையங்கள் நெருக்கடியானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 90 வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் அன்று சுமுகமான முறையில் தேர்தல் நடத்த ஏதுவாக மத்திய துணை ராணுவ படைவீரர்களுடன், கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறைகள், தேர்தல் மேற்பார்வையாளர்கள் அறைகள், ஊடக மையம் ஆகியவை அமைய உள்ள இடங்களையும் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரய்யா, பொறியாளர் அன்பரசி மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் உடனிருந்தனர். 

Next Story